உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் 9

முதல்முறை விருப்பாக இருக்கும்; மறுமுறை பெறுதற்கு ஏவும்; அடுத்தமுறை கவர்தற்குத் தூண்டும்; பின் கவர்தற்குரிய வழிவகைகளைத் தேடித் தேடி அலையும். அலையும் உள்ளம் நிலை கலங்கி ஒருநாள் கவரவே செய்யும். இவ்வளவுக்கும் அடிப்படை பிறர் பொருள் விரும்புதல் ஆகிய வெஃகுதலே.

ஆதலால் வெஃகுதலே களவு என்னும் காழ் கொண்ட- வைரம் ஏறிய-முள்மரத்தின் வித்து!

முள் மர விதை நிலத்து விழாமல் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. நிலத்தில்தானே விழுந்து விட்டாலும் முளைத்து எழுந்தவுடனேயாவது கிள்ளியெறிதல் வேண்டும். அதில் தவறின், கிளையாகிக் கொம்பாகி வளருமுன்னேனும் பிடுங்க வேண்டும். அதில் தவறின், கோடரி தூக்கித்தான் தொலைக்க வேண்டும். அது கையைக் கொல்லும்—கோடரியை வெல்லு வதும் உண்டு!

வெஃகுதல் விதை, விழாமல் முளைக்காமல் காப்பது நலம். ல்லையேல் விலங்கு பூட்டுதலிலும், கடுங்காவலிலும், கால் கை இழத்தலிலும் கொண்டு போய்விடும். இத் தண்டனைகளை வெஃகுவோர்—பிறர் பொருட்களை வெஃகுக!

ஒருவன் ஒரு பள்ளியைத் தோற்றுவிக்கும் நன்னெஞ்சங் கொள்கிறான். அதற்கென அரசு ரூ. 30000 வங்கியில் போட்டு வைக்க ஆணையிடுகிறது. அதனை நிறைவேற்றுமாறு தன் கைப்பணம் காணாமல் கூட, ஓரிரு நிலத்தையும் விற்றுச் சேர்த்துக் கட்ட முயல்கிறான், ஏழைக்கு எழுத்து அறிவித்தல், அன்ன சத்திரம் ஏற்படுத்துதலினும், ஆலயம் அமைத்தலினும் கோடி புண்ணியம் தருவது என உணர்ந்த அந் நல்லோன்!

அவன் பொருளையும் கவர விரும்புகிறான் ஒரு கீழோன்; விரும்பும் ஒன்றே போதாதா? திருடவும் வேண்டுமா? பல கோடிப் பேர்களுக்கு அறிவு ஒளியூட்ட எழும் தெய்வக் கலைக் கூடத்தை எழாமல் தடுக்க முனைகின்றானே பாவி! இக்குற்றம் வெறுக்கத்தக்க ஒன்றா? அவனிடம் இப்பணம் சேர்ந்தால் யாது செய்யும்? பலபேர் குடியைக் கெடுக்கும்! இதற்கோ பிறர் நன்பொருள் விரும்புவது! இத்தகையனை எச்சரித்து வழி காட்டித் திருத்த வேண்டியது அறவோர் கடன்; பின்பற்றிச் சென்று நல்வாழ்வு வாழ வேண்டியது அறிந்தோர் கடன்!

“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்."