16. அழியும் உலகில் அழியாப்புகழ்
பெருக்கெடுத்துவரும் வெள்ளத்தைக் கரையமைத்துத் தடுத்து நிறுத்துவது அரிது. நீர் பெருகி நிற்கும் கரையைப் பெயர்த்து விடுவது எளிது. கரை அமைத்தல் அறிவொடும் பெருவலிமை யுடையார்க்கும் அரிய செயல்; கரையை உடைத்தல் அறிவாற்றல் இல்லார்க்கு எளிய செயல்.
பெருகி வரும் வெள்ளம் செய்யும் கொடுமைகள் கணக்கில் அடங்கா. கரையை மட்டுமா அழிக்கின்றது. வயல் வெளிகள், தோட்டங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் எல்லாவற்றையும் அழிக்கின்றது. பயன் தருவனவற்றைச் சிறுபொழுதில் பாழாக்கிச் சிதைக்கின்றது, வெள்ளக் கொடுமையைத் தவிர்க்க முன்னாளிலே வேந்தன் கரிகாலன் முனைந்தான். இந் நாளை ஆட்சியோ கால்களும், அணைகளும் அமைப்பதைத் தன் பணிகளுள் தலையாய பணியாகக் கொண்டுளது.
வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் அணையுண்டு; உள்ளப் பெருக்கைத் தடுத்து நல்வழிப் படுத்த அணை உண்டா?
அடங்காது ஆரவாரித்துச் செல்லும் வெள்ளத்தைத் தடுக்கும் கரை; பொங்கி எழுந்து கிளம்பும் வெகுளியைத் தடுக்கும் பொறை; அல்லது பொறுமை!
பொறுமை அணை கட்டினால் வெகுளி வெள்ளம் அடங்கும்; உள்ள நிலம் சிறக்கும்! பண்பு விளைவு பலபடியாய்ப் பெருகும்! அடங்காக் கோபமும் ஆறாச் சினமும் தீரா வெகுளியும் வெள்ளமாகக் கிளம்பி விட்டால் உள்ளம் தாங்குமா?
பொறுமையைப் பற்றிய நல்லுரைகள் பலப்பல நாட்டில்
நிலவுகின்றன.
“பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடு ஆள்வார்”
இஃதோர் பழமொழி!