116
இளங்குமரனார் தமிழ்வளம்
—
9
அருள் என்பது யாது?
அன்பு என்னும் அருமைத்தாய் பெற்றெடுத்த பிள்ளையே அருள். தொடர்பு உடையவர்களிடத்து ஏற்படும் நேயம் அன்பு! தொடர்பில்லாத உயிரிடத்தும் ஏற்படும் நேயம் அருள்!
உற்றார்நோய்வாய்ப்பட,இறப்பு வாய்ப்படஅலமருகிறோம்- இஃது அன்பு! உலகின் எந்த மூலையில் எவ்வுயிரும் எய்தும் நோவுக்கும் இறப்புக்கும் அலமருவது அருள்.
கபிலர் என்னும் புலவர் பெருமகனுக்குப் பாரி வள்ளல் கொடை கொடுத்தது அன்பின் விளைவு.
அதே பாரி, ஆடி அசைந்து பற்றிப் படரக் கொழு கொம்பில்லாத முல்லைக் கொடிக்குத் தேரளித்தது அருள்!
அரிசில்கிழார் முதலாம் பெருமக்களைப் பேகன் ஆதரித்தது அன்புத் தொண்டு.
அதே பேகன், மழை மேகம் கண்டு மனங்களித்து ஆடிய மயிலை வாடைக்கு நடுங்குவதாக எண்ணித் தான் வாடிக் கொடுகிக் கொண்டும் அதற்குப் போர்வை போர்த்தியது அருள் தொண்டு!
"எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும்" என்பது அன்பு வாக்கு.