உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

செல்வத்திற்காக எச் செல்வத்தையும் இழக்கத் துணிந்து நிற்கும் ஏற்ற மிக்கவர்களும் உண்டு. அத்தகையவர்கள் தானே “கன்னல் பாகில் கோல் தேனில், கனியில் கனிந்த கவி” என்று அனுபவித்து இன்புறுகின்றனர்.

இலக்கிய நூல்கள் பலப்பலவே, அவைதரும் இன்பம் அனைத்தும் ஒன்றாக இருக்குமோ? படக்காட்சிகளிலே கூட ஒரு படம் தரும் இன்பத்தையும் பயனையும் இன்னொரு படம் தருவது இல்லையே! இந் நிலைமையில் இலக்கிய நூல்கள் தரும் இன்பம் ஒன்றாக இருக்க முடியாது.

கலைகளை இரண்டாகக் காரணங் கருதிப் பிரிப்பர். அவை: பயன் கலை. கவின் கலை; பயனைத் தலைமையாகக் கொண்டு செய்யப் பெறுபவை பயன் கலைகள்; இன்பமே தலைமையாகக் கொண்டு செய்யப் பெறுபவை கவின்கலைகள். இவ்விரண்டும் அமைந்த ‘கவின்மிகு பயன்கலை'ச் செல்வமாக இருக்கிறது 'குறள்' எனின் புனைந்துரையன்று.

திருக்குறள், தமிழன்னையின் திருமுடியில் இலங்கும் வாடாத நறுமண மாலையாக உள்ளது. இது சிறிய அளவில் கூட உயர்த்திச் சொல்லுவது ஆகாது. திருக்குறள், பயனும் கவினும் கனிந்திருக்கும் காரணத்தால் தான் எத்துணையோ அற நூல்களும் காலவெள்ளத்திற்கு ஆட்பட்டுச் சென்றும் தான் செல்லாத் தனி நிலை பெற்று ஓங்குகிறது.

கற்றவர்

பழம் பெரு நூல்களிலே பலப்பல சொல் மாற்றங்கள் (பாடபேதங்கள்) காணப்படுகின்றன. இடை இடையே பலப்பல பாடல்கள் செருகி வைக்கப் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டு மாற்றங்களும் இல்லாமல் இலங்கும் நூல்கள் இரண்டே இரண்டு என்றால், அவ்விரண்டுள்ளும் ஒன்று திருக்குறள் என்றால், அதன் சிறப்பு சொல்லாமலே விளங்கும். திருக்குறள் தவிர்த்த இன்னொரு நூல், தமிழன் பெருமைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் தொல்காப்பியமாகும். கற்றவர் என்பவர் திருக்குறளும் தொல்காப்பியமும் கற்றவரே என்றும், காத்தவர் என்பவர் திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் காத்தவரே என்பதும் சான்றோர்கள் கொள்கையாக இருந்தது என்பது உறுதியாகின்றது.