254
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31
பாராட்டும் சான்றிதழும் பெற்றவர்களே. ஆதலின் இவற்றை எல்லாம் எண்ணியே சங்கஞ் செய்த பணியை மதிப்பிடுதல் வேண்டும் என்பதாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கம் தனித்தமிழ்த் தேர்வு தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே, சென்னைப் பல்கலைக் கழகம் தனித்தமிழ் வித்துவான் தேர்வைக் கொணர்ந்தது. அதன் பின்னர்ப் புலவர் கல்லூரிகள் பல தோன்றின; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சார்ந்த 'மீனாட்சி கல்லூரி'யும் தமிழ்ப் புலவர்களை உருவாக்கியது, கல்லூரிகளிலும் தமிழ் இளங்கலை முதுகலைப் படிப்புகள் வந்தன; புலவர்களும் முதுகலைப் பட்டம்பெற்றவர்களும் முனைவர்களும் பெருகினர்; இந்நிலையில் தமிழ்ச் சங்கம், தான் தோற்றுவித்த பண்டிதத் தேர்வை நடாத்துவதுடன், பல்கலைக்கழக உதவியுடன் கூடிய புலவர் கல்லூரியையும் தோற்றுவித்து நடாத்தியது. ஆதலால், தமிழ்ச் சங்கச் சார்பில் அமைந்த கிளை நிறுவனங்களுள் ஒன்றாகச் செந்தமிழ்க் கல்லூரி விளங்கலாயிற்று. பின்னர்க் காலச் சூழலாலும், வேலையின்மை இக்கட்டாலும், பண்டிதத் தேர்வு பெற்றோர்க்கு வேலைவாய்ப்பு இன்மையை அரசு வெளியிட்டது. பண்டிதத் தேர்வும் நிறுத்தப் பெறலாயிற்று.
செந்தமிழ்க் கல்லூரி தொடங்கிய வரலாற்றை, அந்நாள் தமிழ்ச் சங்கத்தலைவர் திரு. பி.டி. இராசன் அவர்கள் 14-8-58-இல் நிகழ்ந்த செந்தமிழ்க் கல்லூரி மாணவர்கள் கூட்டத்தில் பேசும் போது, 'திரு. பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்ட இத்தமிழ்ச் சங்கத்திலே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கல்லூரி இருக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு உண்டாயிற்று. அதனால் டாக்டர் திரு. இலக்குமணசாமி முதலியார் அவர்களை நெருங்கிக் கேட்டோம். அவர்களுடைய நல்லெண்ணத்தாலும் ஆர்வத்தாலும் எமது குறிக்கோள் நிறைவேறிற்று' என்று கூறியுள்ளார்கள், தமிழ்ச் சங்கம் தளர்வுற்ற காலையில் அதனை நிலைபெறுத்தியவர்கள் இருவர் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவர்களுள், தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்துக் காவல் குழவி கொள்பவரின் ஓம்பிய பாண்டித்துரைத் தேவர் 1911 இல் மறைந்ததும், தளர்ச்சிப் பொழுதில் ஊன்றி நின்று உயரிய உழைப்பால் நிலைபெறுத்திய டி.சி. சீனிவாசையங்கார் ஒருவர்; அச் சீனிவாசர், 1951 இறுதியில் மறைந்ததும் ஆட்டங் கண்ட சங்கத்தை நிலைப்படுத்திய பி.டி.