உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

என் ஆசான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் குறித்துத் தமிழ் ஆராய்ச்சியுலகுக்கு அறிமுகம் செய்யவேண்டிய அவசியமில்லை. தம் 80 ஆண்டு வாழ்க்கையில் அவர் 60 ஆ ண்டுகளுக்குக் குறையாமல் ஆராய்ச்சித் துறைக்கே தம்மை ஒப்படைத்துக்கொண்டார். ஒழுங்கான கல்வி கேள்வியோடு ஓர் உள்ளுணர்வும் (Insight) அவருக்கு இருந்தது; அது தமிழக வரலாற்றுச் சிக்கல்கள் பலவற்றைச் சுலபமாகத் துலங்க வைத்தது. கடுமையான உழைப்பும், உண்மை காணும் வேட்கையும், அவற்றைக் குழப்பாமல் வெளியிடும் பெற்றியும் அவருக்கேயுரிய சிறப்புகளாகும்.

அவர் புரிந்த பல ஆராய்ச்சிகளில் கடைசிக் காலத்தில் புரிந்த ஒன்று, சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் பற்றியது. இது தமிழக வரலாற்றின் சில முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க உதவுகிறது; கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளின் தமிழக வரலாற்றை வரையறுக்கத் துணை புரிகிறது; கடைச்சங்க காலத்தை அறுதியிட மெத்தவும் கைகொடுக்கிறது.

தமிழகத்து மலைக்குகைகளில் கிடைத்த இப் பிராமிக் கல்வெட்டுகளைச் சில தேர்ந்தஅறிஞர்கள் கண்டுபிடித்தார்கள் என்றாலும்,அவற்றைச் சரியாகப் படித்தறியத் தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம்,பண்பாடு, வரன்முறை முதலியவற்றில் ஊன்றிய அறிவு தேவை; கிடைத்த கல்வெட்டுகள் யாவும் ஜைன முனிவர்களுக்கு வழங்கப்பட்ட மலைக்குகைகளிலேயே காணப்படுவதால், ஜைனசமய ஞானமும் ஓரளவு வேண்டும்;இவற்றோடுதமிழகவரலாற்றைப் பொறுப்போடும் கண்ணியாகவும் துல்லியத்துடனும் கணிக்க வேண்டும் என்கிற நல்வெண்ணமும் அவசியம். இவை யாவும் அமைந்தவராக மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விளங்குவதனால், அவருடைய வாசிப்பை Reading நாம் கணிசமாக நம்ப முடியும்.

எதனையும் தம்மால் இயன்ற அளவு ஒழுங்காகத் தொகுத்து, கூர்ந்து ஆராய்ந்து, உத்தமமாகத் தமிழ் மக்களுக்கும் உலக மக்களுக்கும் படைப்பது மயிலை சீனி. அவர்களின் வழக்கம்.