உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

அதியமான் திருக்கோயிலூரை வென்றதும் உண்மை; அதனை ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு வேறு சான்று என்ன தேவை? அதியன் சிவனடியை வணங்கும் சென்னியான் ஆயினும் சமணர்க்குப் பாளி அமைத்துக் கொடுத்திருக்கிறான் என்பதைக் காணும் போது அவன் எல்லாச் சமயங்களையும் போற்றியிருக்கிறான் என்ற உண்மையும் தெளிவாகின்றது. அது மட்டுமன்று; “அஞ்சி ஈத்த பாளி” என்றும் அக் கல்வெட்டு கூறுகிறது.

இக் கல்வெட்டு, தமிழக வரலாற்றுக்கு மட்டுமே அரிய செய்திகளை வழங்கியுள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை வழங்கியுள்ளது, எனலாம். அதியனை இது "ஸதியபுதோ அதியந் நெடுமாஞ் அஞ்சி” என்று அழைக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மௌரியப் பேரரசனான அசோகன். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப் பெருமன்னன் தன் கல்வெட்டுக்களில் சோழர், பாண்டியர், கேரள புத்ரர், ஸத்திய புத்ரா ஆகியோரைக் குறித்துள்ளான். இவர்களின் நாடுகள் அவ் அசோகனின் ஆட்சிக்குட்பட்டவையல்ல. அவர்கள் தனியாட்சி நடத்தி வந்தனர். அங்கெல்லாம் அவன் பௌத்த அறங்கள் பரவும் வகை செய்தான். அசோகன் குறிக்கும் "ஸத்ய புத்ர்" யார் என்பது இதுகாறும் அறியக்கூடவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் 'வாய்மொழிக் கோசர்' என்பவராய் இருக்கக் கூடும் எனச் சிலர் கூறுகின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதினர். மகாராட்டிரத்தில் “சத்புதர்” என்போர் உண்டு. இஃது அவர்களா யிருக்கக் கூடும் என்போரும் உளர். சத்ய மங்கலம் இவர் பெயரால் வந்தது என்கின்றனர் சிலர். “ஸதிய புதோ” என்பவர் அதியமான்க ளாக இருக்கக் கூடும் என்பவர்களும் உண்டு.

وو

இப்போது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் “ஸத்ய புத்ரர்கள்” அதியமான்கள் தாம் எனத் திட்ட வட்டமாகத் தெளிவாகி விட்டது. அதியனை “பொய்யா எழினி" (சத்யபுத்ரர்) எனப் புறநானூறு கூறுகிறது.