உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

153

அதியமான் நெடுமான் அஞ்சியைப்பற்றி அறிந்திராத கற்றறிந்த தமிழர் இருக்க மாட்டார்கள். தமக்குக் கிடைத்த அரிய நெல்லிக் கனியைத் தான் உண்ணாது தமிழ் மூதாட்டியான ஒளவையாருக்கு அளித்த வள்ளல் அன்றோ அதியமான் நெடுமான் அஞ்சி!

ஔவையார், பரணர், மாமூலனார், அரிசில் கிழார், நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தை மகள் நாகையார் கிய புலவர்கள் பாடிய சங்கப் பாடல்கள் அதியனின் புகழைக் கூறுகின்றன. தகடூரை (இன்றைய தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் அதியர் வழியினர் அதியமான் மரபின் முன்னோர்கள் ஆவர்.

இவ்வளவு சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிடப் பெற்றான். சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான்.

முதன்முதலில் புகளூர் ஆர் நாட்டார் மலைக் கல்வெட்டில் மூன்று சேரர் தலைமுறையைக் குறிக்கும் கல்வெட்டைப் படித்துச் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள அரசர்களே கல்வெட்டில் குறிக்கப் பெறுவர். இதிலிருந்து சங்க இலக்கியத்தின் காலத்தைக் கணிக்க முடியும் என்று உலகுக்கு வெளிக்காட்டியவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆவர். ஜம்பையில் இப்போது கிடைத்துள்ள அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டு சங்க இலக்கியத்தில் கூறியுள்ள அரசர்களும் தலைவர்களும் வாழ்ந்து - வீரம் விளைத்துக் குடிகளைக் காத்து – வரலாறு படைத்தவர்களே என ஐயம்திரிபற ஆணித் தரமாக ஆதாரச் சான்றுகளுடன் எடுத்துக் கூறுகிறது என்பதாலேயே இக் கல்வெட்டு மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

இக் கல்வெட்டு அதியன் ஆட்சியில் வேறு யாரோ கொடுத்த தன்று. அதியமான் நெடுமான் அஞ்சியே கொடுத்தது. அது மட்டுமன்று. தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்கப் பாடலால் தெரிகிறது. ஔவையும் பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. அந்தத் திருக் கோயிலூருக்கு மிக அண்மையிலேயே இந்தக் கல்வெட்டும் இருக்கிறது. எனவே, அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்திக் கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவாகிறது.