உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

1. *ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த

அதியமான் கல்வெட்டு

தென்னார்காடு மாவட்டத்தில், திருக்கோயிலூரிலிருந்து 16 கல் தொலைவில் ஜம்பை என்னும் ஊர் உள்ளது. இவ்வூரைத் திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம். இவ்வூர் பெண்ணையாற்றின் வடகரையிலுள்ளது. பல குன்றுகளால் சூழப்பட்டிருப்பதால் இவ்வூர் பார்ப்பதற்கு இனிய காட்சி யளிக்கிறது. இவ்வூர் ‘வாணக்கோப் பாடி நாட்டில்' இருந்தது எனப் பழைய கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டொன்றை அண்மையில் தமிழ்நாட்டரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கல்வெட்டியல் மாணவர் திரு. செல்வராஜ் கண்டு பிடித்துள்ளனர்.

இக் குன்றத்தில் “ஆள் ஏறாப் பாறை க் “சன்யாசி மடம்” “தாசி மடம்”என்னும் பெயர்களுடைய பகுதிகள் உண்டு. தாசி மடம் என்பது இயற்கையாக அமைந்த குகைத்தளம். அதில் தான் இக் கல்வெட்டு இருக்கிறது. ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள இக் கல்வெட்டு பின் வருமாறு:

"ஸதியபுதோ அதியந் நெடுமாஞ் அஞ்சி ஈத்த பாளி”

என்பதாகும். இவ்வெழுத்துக்கள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அதனைப் படித்த தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி கூறியுள்ளார்.

இக் கல்வெட்டின் சிறப்பு யாதெனின் இதிலுள்ள இரண்டு சொற்றொடர்கள் "ஸதிய புதோ" என்பதும் “அதியந் நெடுமாஞ் அஞ்சி”என்பதுமாகும்.

  • அண்மையில் கண்டுபிடிக்கப்பெற்ற இக் கல்வெட்டினைப் பற்றித் தொல் பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், தினமணி 12-10-81 இதழில் எழுதிய கட்டுரையினின்று தொகுக்கப்பெற்றது.