உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

183

(குறிப்பு: இச்செய்யுளில், ‘கம்பமொடு துளங்கிய இலக்கம் என்பது இலக்கு மரத்தை, வீரர்கள் குறி தவறாமல் அம்பு எய்து பழகுவதற்காக, உயரமாக வளர்ந்த இலவம் பஞ்சுமரம், முருக்கமரம் போன்ற மரங்களைத் தேர்ந்தெடுத்து அந்த மரங்களின் கிளைகளை யெல்லாம் வெட்டிவிட்டு நடுமரத்தை மட்டும் விட்டுவைப்பார்கள். அந்த உயரமான மரத்தின் ஓரிடத்தைக் குறியாக வைத்துக்கொண்டு வில்லிலிருந்து அம்பு எய்து பழகுவார்கள். அம்மரத்தின் மேல் வேல் எரிந்தும் பழகுவார்கள். 'வென் வேல், இளம்பல் கோசர் விளங்கு படை கன்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின், பெரு மரக் கம்பம்' என்று காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் புறம் 169இல் இதனைக் கூறுவது காண்க. இந்த இலக்குக் கம்பத்தில் பல அம்புகள் தைத்துக் கொண்டிருப்பதுபோல, ஆனிரைகளை மீட்ட வீரன் உடம்பில் பகைவீரர் எய்த அம்புகள் தைத்திருந்தன. வட மோதங்கிழார், இலக்குக் கம்பத்தில் அம்புகள் தைத்துக் கொண் டிருப்பது போல, வீரனுடைய உடம்பில் அம்புகள் தைத்துக் கொண் டிருந்தன என்று கூறுவது வெறுங் கற்பனை அன்று. வடஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலைத் தாலுகாவைச் சேர்ந்த செங்கம் என்னும் ஊரில் உள்ள நடுகற்கள் இரண்டில், தொறு மீட்டு இறந்து போனவர் உடம்பில் அம்புகள் தைத்திருப்பது போன்று சிற்ப உருவம் காணப்படுகின்றன.

மகாபாரதத்தில் விராடபர்வத்தில் தொறு கவர்தலும், தொறு மீட்டலும் கூறப்படுகிறது. துரியோதனனுடைய வீரர்கள் விராட தேசத்துக்கு வந்து அந்த தேசத்தின் பசுமந்தைகளை ஓட்டிச் கொண்டு போனார்கள். அப்போது அங்குப் பேடியின் உருவத்தோடு அஞ்ஞாத வாசஞ்செய்திருந்த அர்ச்சுனன், உத்தரகுமரனைத் தேரில் ஏற்றிக் கொண்டு போய்ப் போர் செய்து ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வந்தான் என்று மகாபாரதம் கூறுகிறது.

கரந்தைப் போரில் தொறு மீட்கச் சென்றவருடைய பகைவருடைய அம்புக்கு அஞ்சித் திரும்பி வருவதும் உண்டு. ஆனால் அவர்களை நாட்டு மக்கள் மதிக்கமாட்டார்கள். தொறுவை மீட்காமல் பகைவருடைய அம்புக்கு அஞ்சிப் புறங்காட்டி ஓடிவந்த ‘வீரர்களை'த் திருத்தக்க தேவர் புகழ்வது போல இகழ்ந்து நகைக்கிறார். இராசமாபுரத்திலிருந்து பசு மந்தைகளை அயல் நாட்டு மறவர்கள் வந்து கவர்ந்து கொண்டு போனார்கள். இதை அறிந்த அரசன் கட்டியங்காரன்,