உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இந்தச் சமயப்போர் நடந்த காலத்திலே இந்துமதம் சைவம், வைணவம் என்னும் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்த போதிலும், பிற்காலத்தில் ஏற்பட்டதுபோல் பெரிய பிளவு ஏற்பட்டுச் சைவ வைணவப் போர் நிகழ்ந்தது போல அல்லாமல் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருந்து சமணசமயத்தையும் பௌத்த மதத்தையும், கடுமையாகத் தாக்கின. (பிற்காலத்தில் மும்முரமாக நடந்த சைவ வைணவப் போராட்டம், பௌத்த சமண சமயங்கள் பெரிதும்

ஒடுங்கிப்போன காலத்தில் நடந்தது.)

சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்தல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நிலபுலங் களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இவ்வாறு இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள. இவற்றைச் சைவ வைணவ நூல்களில் ஆங்காங்கே காணலாம்.

“வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரி யனகள் பேசிப் போவதே நோய தாகிக்

குறிப்பெனக் கடையுமாசில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!

என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல் அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.

திருஞானசம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரைக் கழு வேற்றினார் என்று சைவசமய நூல்களாகிய பெரியபுராணம், திருவிளை யாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும், இவற்றை நினைவுப்படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றுங் காட்சியைச் சித்திரந் தீட்டி வைத்திருப் பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.

காஞ்சிபுரத்துக்கடுத்த திருவோத்தூரிலும் இதுபோன்ற கலகம் நடந்திருக்கிறது. அவ்வூரில் ஒரு சைவர் பனை மரங்களை நட்டு வளர்க்க, அம்மரங்கள் வளர்ந்து ஆண் பனையாயிருக்க, அங்கிருந்த சமணர் அதைக் கண்டு 'இவ்வாண் பனைகள் பெண்பனை ஆகுமோ? என்று கேட்டாராம். மதுரைக்குச் சென்று வந்த ஞானசம்பந்தர் இவ்வூருக்கு