உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

93

அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்திய போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்டபிறகு தான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்துப் போர்வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறடைந்த திருநாள் தீபாவலி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டபிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகை யின் உண்மைக் காரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதை தான் நரகாசுரன் கதை.

சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கைகளைக் கைப் பற்றிக் கொண்டார்கள் என்று கூறினோம். இக்கொள்கைகளில் இந்துக் களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வோம் :

சைவமும் சமணமும் :

சைவர்களுக்கும் சமண சமயத்த வருக்கும் பொதுவான சில கொள்கைகளை இங்கு ஆராய்வோம். இக் கொள்கைகளில் சில இரண்டு சமயத்துக்கும் பொதுவானதாக, அடிப்படையான கொள்கைகளில் ஒற்றுமையுள்ளதாக இருக்கின்றன. வேறு சில மேற்பார்வைக்குப் பொது வாகவும் அடிப்படைக் கொள்கையில் வேறுபட்டும் காணப்படுகின்றன. ஆயினும், மிக மிகப் பண்டைக் காலத்தில், இவ்விரு சமயங்களும் மிக நெருங்கிய தொடர்புடையனவாய் இருந்து பின்னர்க் காலஞ் செல்ல செல்ல வேறுபட்டு வெவ்வேறு தத்துவப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டனவாகத் தோன்றுகின்றன. இக் கொள்கைகளை ஆராய்ந்து காண்போம்:

சிவராத்திரி :

சைவ சமயத்தவர் சிவராத்திரியைப் புனிதநாளாகக் கருதி கொண்டாடி வருகின்றனர். எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சமண சமயத்த வரும் சிவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இதில், சிறப்பு என்னவென்றால், சைவர் சமணர் ஆகிய இருவரும் கொண்டாடும் சிவராத்திரி மாதம், பக்ஷம், திதி, நட்சத்திரம் முதலிய எல்லாம் ஒன்றாக அமைந்திருப்பது தான்.