உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சில புராணக் கதைகள்

சில புராணக் கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ் வேறுவிதமாக வழங்கி வந்தன என்பது ஆராய்ச்சியினால் அறியப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை ஆராய்வோம்.

ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி என்னும் சைவசமய நூலினாலும் அதன் பழைய உரையினாலும் சில செய்திகள் அறியப் படும். இந்தப் பரணி நூலில், கோயில் பாடியது, 70 ஆவது தாழிசையில் இச் செய்தி கூறப்படுகிறது.

"மலைகொண் டெழுவார் கடல்கொண் டெழுவார் மிசைவந் துசிலா வருடஞ் சொரிவார்

நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுதற் கிவரிற் பிறர்யா வர்நிசா சரரே.

இதற்கு, பெயர் அறியப்படாத பழைய உரையாசிரியர் கூறுவதாவது: “யானைமலை, நாகமலை யென இரண்டு மலை உளவென அவை யிற்றைக் காட்டி, 'பண்டு இவை அமணர் மந்திரவாத வலி காட்டின மலைகள். மதுரையை ஒருமலை யானையா யழிக்கவும் அவ்வியானை மதுரையில் வருவதன் முன்இந்த மலை மகாநாகமாய் அந்த யானையை விழுங்கவுங் காட்டி உயிர் பெறுத்தி நடத்திவர, என் சுவாமி (பாண்டியன்) சாதுவாதலிற் பயப்பட்டு இம் மகா நகரத்திற் புக்கனர். பின்பு எழுகடலுக்கு மாறாக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திர சாலமு முண்டு. உறையூரில் கல் வருஷமும் (வருஷம்-மழை) மண் வருஷமும் பெய்வித்து அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய்தார் இவர் (சமணர்). அதற்குப் பின்பு இராசதானி திருச்சிராப்பள்ளி யாய்த்து' என்றவாறு.

இதில் சமணர் செய்ததாக மூன்று செய்திகள் கூறப்படுகின்றன. 1. மதுரைக்கு அருகில் உள்ள இரண்டு மலைகளில் ஒன்றை ஆனையாகவும்; இன்னொன்றை மலைப் பாம்பாகவும் அமையச் செய்து அவற்றிற்கு உயிர் கொடுத்து யானையைப் பாம்பு விழுங்குவது போல் செய்து பாண்டியனுக்குச் சமணர் காட்டினர். 2. ஏழுகடல்களையும் ஓர் இடத்தில் வரும்படி செய்து அதனைப் பாண்டியனுக்குக் காட்டினர். 3. உறையூரில் கல்மழை மண்மழை பெய்யச் செய்து சமணர் அவ்வூரை அழித்தனர்.