உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இலங்கைத் தீவில் வருணன் வணக்கம்*

பழந்தமிழ் நாட்டிலே நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல் தெய்வமாகிய வருணனை வழிபட்டார்கள் என்றும், அவ்வருணன் வழிபாடு தமிழ் நாட்டிலிருந்து இலங்கைத் தீவிலும் பரவியிருந்தது என்றும் சென்ற திங்கள் தமிழ்ப் பொழிலில் எழுதியிருந்தோம். லங்கைத் தீவில், வருணனைச் சிங்களவர் தமது மொழியில் உபுல்வன் என்று அழைத்தனர் என்றும், உதகபால வருணன் என்னும் சொல் உபுல்வன் என்று சிங்கள மொழியில் திரிந்து வழங்கிற்று என்றும் எழுதியிருந்தோம். உபுல்வன் என்னும் சிங்கள மொழிச் சொல்லினைப் பாலி மொழியில் உப்பலவண்ணன் என்றும், வடமொழியில் உத்பல வர்ணன் என்றும் மாற்றிப் பிற்காலத்தவர் வழங்கினார்கள். வழங்கியது மட்டுமல்ல, உபுல்வனை (வருணனை) விஷ்ணுவாகவும் மாற்றி விட்டார்கள். இது பிற்காலத்தில் உண்டான மாறுபாடு.

ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள் சேர்ந்தது உதகபால வருணன் என்பது. உதகபாலன் என்றால் நீரை ஆள்பவன் என்பது பொருள். வருணன் என்றாலும் நீர்க்கடவுள் என்பது பொருள். சிங்களவர் முருகனைக் கந்த குமரன் என்றும் கூறுகின்றனர். கந்தன் என்றாலும் முருகன்; குமரன் என்றாலும் முருகன். ஒரே பொருள் உள்ள இரண்டு சொற்களை இணைத்துக் கந்த குமரன் என்று கூறுவது போலவே, கடல் தெய்வத்தை உதகபால வருணன் என்று வழங்கினார்கள். உதகபால வருணன் என்னும் சொல் பிற்காலத்தில் சிங்கள மொழியில் உபுல்வன் என்று மருவி வழங்கிற்று.

இலங்கைத்தீவிலே உரோகண என்னும் பகுதியைக் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் அரசாண்ட தப்புலன் (தாபுளு சேன்) என்னும் அரச னுடைய சாசனம் ஒன்று, அவ்வரசன் உபுல்வன் என்னும் தெய்வத்தை வழிபட்டான் என்று கூறுகிறது. உபுல்வன் (வருணன்) வழிபாடு இலங்கை யில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் நிகழ்ந்தது. உபுல்வன் கோயில், இலங்கையின் தென்கோடியில் உள்ள தேவுந்தர நகரத்திலே இருந்தது தேவுந்தர நகரம் அக்காலத்தில் * தமிழ்ப்பொழில். 34:5, 1968.