உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

123

வந்த காரிகை கண்ணகியாக இருக்கவேண்டும் என்று கூறினார். இந்தச் செய்தியைக் கேட்ட சேரன் செங்குட்டுவன் பத்தினியைப் போற்றி அவளுக்குக் கோட்டம் அமைக்க எண்ணினான். இளங்கோ அடிகள், கோவலன் கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றைச் சிலப்பதிகாரக் காவியமாகப் பாட எண்ணங்கொண்டார். சீத்தலைச் சாத்தனார் கோவலன் மகள் மணிமேகலையின் துறவைக் காவியமாகப் பாட உறுதி கொண்டார். இவ்வாறு இம் மூன்று செயல்களும் பேராற்றங் கரையில், செங்குட்டுவனுடைய பொழில் வாழ்க்கையின் போது, உருவெடுத்தன.

மணிமேகலை காவியத்தைச் சாத்தனார் புலவர்களுக்காக எழுத வில்லை. சாதாரண கல்வி கற்ற மக்களுக்காகவும் அவர் எழுதினார். ஆகவே அந்தக் காவியம் எளிய நடையில் அமைந்துள்ளது. புலவர் மட்டும் அறிந்து கொள்ளும் உயர்ந்த நடையில் எழுதாமல் சாதாரண படிப்புள்ளவர்களுக்கும் விளங்கும்படி எளிய நடையில் அக்காலத்துத் தமிழில் எழுதினார். இப்படி எழுதவேண்டியது பௌத்த மதத்தின் கோட்பாடாகும். இதைப் பகவான் புத்தரே தம்முடைய காலத்தில் வற்புறுத்திக் கூறியுள்ளார். அந்தக் கட்டளையைக் கடைப்பிடித்து சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை காவியத்தை எழுதினார்.

6

பகவான் புத்தர் தம்முடைய உபதேசங்களை அக்காலத்தில் வட இந்தியாவில் வழங்கி வந்த பாலி மொழியில் போதித்தார். அவர், மக்களுக்கு விளங்காத, கற்றவருக்கு மட்டும் விளங்கும்படியாக, பேச்சு வழக்கில் இல்லாத சம்ஸ்கிருத மொழியில் உபதேசம் செய்யவில்லை. அவருடைய சீடர்களும் வெவ்வேறு நாடுகளுக்குப் போய் அந்தந்த நாடுகளில் பேசுகிற தாய் மொழியில் புத்தர் உபதேசங்களைப் போதித்தார்கள். அப்போது சம்ஸ்கிருத மொழியை நன்றாகக் கற்றவர்களான இரண்டு பிராமண பிக்குகள் பகவன் புத்தரிடம் வந்து, புத்தர் உபதேசங்களைச் சம்ஸ்கிருத பாஷையில் எழுதி வைப்பது நல்லது என்று கூறினார்கள். புத்தருடைய உபதேசங்களை வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் போதிக்கிற பிக்குகள் அந்தந்த நாட்டுத் தாய் மொழிகளில் போதிக்கிறார்கள். இப்படிச் செய்வதனால் புத்தருடைய உபதேசங்கள் கெட்டுப்போகின்றன. ஆகையால் பகவன் புத்தருடைய உபதேசங்களைச் சந்த பாஷையில் (சம்ஸ்கிருத மொழியில்) போதிப்பது நல்லது என்று சொன்னார்கள். இதைக்கேட்ட பகவன் புத்தர் அவர்களுடைய கருத்தை வன்மையாக மறுத்தார். படித்தவர் களுக்கு மட்டும் விளங்குகிறதும் பொதுமக்களுக்கு விளங்காததுமான