உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பார்த வெண்பாவைப் பாடிய பெருந்தேவனாரே இந்நூலையும் பாடியிருக்கக் கூடும் என்று சிலர் கருதுகின்றனர். இந்நூலை இயற்றியவர் இவ்வரச னுடைய தம்பியார் என்றும், அவர் இவ்வரசனைப் பகைத்து இவர்மீது வசை பாடுவதற்காக இந்நூலை இயற்றினார் என்றும், இந்நூலைப் பாடக் கேட்ட நந்திவர்மன் உயிர் நீத்தான் என்றும் ஒரு கதை வழங்குகிறது. அண்மைக் காலத்து நூலாகிய சோமேசர் முதுமொழி வெண்பா, “நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்" என்று கூறுகிறது. இக்கதை கற்பனைக் கதை என்று தோன்றுகிறது. இக்கதைக்குக் காரணம் கீழ்க்கண்ட செய்யுளாக இருக்கக் கூடும் :

66

வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை யடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம் நானும் என்கவியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயா பரனே

என்பது அச் செய்யுள்.

இச் செய்யுளை, நந்திக் கலம்பகச் செய்யுள் எனக் கொண்டு, நந்திவர்மன் உயிரோடிருந்தபோது பாடப்பட்ட வசைப் பாடல் என்று கருதி, மேற்படி கதையைக் கட்டிவிட்டார்கள் போலும். இச் செய்யுள், நந்திவர்மன் இறந்து அவன் உடம்பு எரிக்கப்பட்டபோது, யாரோ ஒரு புலவர் இயற்றிய தனிப்பாடல் என்று தோன்றுகிறது. இத் தனிப்பாடல், பிற்காலத்திலே நந்திக் கலகம்பக நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டது. இச் செய்யுளே இக்கற்பனைக் கதைக்குக் காரணமாயிற்று என்று கருதலாம்.

கலம்பக நூல்களில், காலத்தால் முற்பட்டது இந்த நந்திக் கலம்பகம் எனத் தெரிகிறது.

சொல்லும் பொருளும் நயம்பட அமைந்துள்ள இந்த நந்திக் கலம்பகம், வெறும் இலக்கிய நூல் மட்டும் அன்று; நந்தி வர்மன் வரலாற்றை ஆராய்வதற்கும் உதவியாக இருக்கிறது. ஆகவே, இந்நூல் முழுவதையும் பின் இணைப்பில் சேர்ந்துள்ளேன்.