உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

425

அவன் என்னை நினைத்திருப்பான்? இவ்வாறெல்லாம் அவள் தனக்குள் எண்ணினாள். ஆனால் அவள் அவனை வெறுக்கவில்லை. அவன் மேலிருந்த அன்பும் காதலும் அவளுக்குக் குறையவில்லை. எதற்கும் நேரில் போய்க் காண்போம் என்று எண்ணினாள். தன்னை அவன் ஏற்றுக்கொள்ளவில்லையானால் என்ன செய்வது? கடைசியில் அவள் அவனை நேரில் காணத் துணிந்தாள்.

தேசிகப்பாவை பல்லவ நாட்டை விட்டுப் பயணமானாள். பல நாட்கள் பயணஞ்செய்து கடைசியில் எமாங்கத நாட்டை அடைந்தாள். தலைநகரமான இராசகிரிய நகரத்துக்கு வந்து தங்கினாள். அங்குச் சில நாட்கள் தங்கியிருந்து சீவக குமரனைப்பற்றிய செய்திகளை விசாரித்து அறிந்தாள். அச்செய்திகளில் ஒன்று, அனங்கமாலை என்னும் கணிகைப்பெண் ஒருத்தி சீவக குமரனைக் காதலித்தாள். ஆனால், அவன் அவளைக் காதலிக்கவில்லை என்பது இந்தச்செய்தி தேசிகப் பாவைக்கு உதவியாக இருந்தது அனங்கமாலையின் ஊழியப் பெண் போல நடித்துச் சீவககுமரனிடம் போக அவள் திட்டம் இட்டாள். அனங்கமாலை, சீவககுமரனுக்குக் கடிதம் எழுதியதுபோல ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டு அக்கடிதத்தைச் சீவககுமரனிடம் கொடுக்கும் ஊழியப்பெண்போல அவள் கடிதத்தை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்றாள். சீவககுமரன் தனியே இருக்கும் நேரம் அறிந்து வாயிற்காவலனிடம். தான் அனங்கமாலையின் ஊழியப்பெண் என்றும் அரசனைக் காண வந்ததாகவும் கூறினாள். வாயிற்காவலன் அரசனிடஞ் சென்று கூற, அரசன் அவளை உள்ளே விடும்படி கட்டளையிட்டான். தேசிகப்பாவை உள்ளே சென்று ஊழியப்பெண் என்னும் நிலையில் அரசனுடைய காலில் விழுந்து வணங்கித்தான் கொண்டுவந்த கடிதத்தைக் கொடுத்தாள். அரசனான சீவககுமரன் அவளைக் கூர்ந்து நோக்கிப் புன்முறுவல் பூத்தான். அவளை அருகில் அழைத்துத் தழுவிக்கொண்டு அருகில் அமர்த்தி அவளைப் பார்த்துச சிரித்தான்.

'அரசர் பெருமானே! அடியேன் ஓர் எளிய ஊழியப்பெண். அடியேனுக்கு அரசர் பெருமான் இவ்வாறு அருளலாமோ?' என்று சொன்னாள், ஊழியப்பெண் வேடத்தில் இருந்த தேசிகப்பாவை. ஆம். நீ யார்? என்பது எனக்குத் தெரியும். ஊழியப்பெண் வேடத்தில் வந்த தேசிகப்பாவை நீ என்பதை அறிவேன். அரச போகத்திலும் செல்வச் செருக்கிலும் முழுகி உன்னை மறந்துவிட்டேன் என்று கருதாதே.