உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

இவ்வாறு இந்தியாவிலும் அதற்கு அண்மையிலும் உள்ள நாடுகளுக்குப் பௌத்த பிக்ஷுக்களை அனுப்பிய மூன்றாவது பௌத்த சங்கம், தமிழ்நாட்டிற்குப் பிக்ஷுக்களை அனுப்பியதாக இலங்கை நாட்டு நூலாகிய மகாவம்சம் கூறவில்லை. ஏன்? இதன் காரணம் என்ன? ஆனால், மேலே காட்டியபடி, அசோக சக்கரவர்த்தி எழுதியுள்ள கல்வெட்டுச் சாசனங்கள் இரண்டும் (Edicts - ii, and - iii) தமிழ்நாட்டிலே பௌத்த பிக்ஷுக்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றன. அன்றியும் அசோக சக்கரவர்த்தியும் அவரால் அனுப்பப் பட்ட மகேந்திர தேரரும் கட்டிய விகாரைகளும் தூபிகளும் தமிழ்நாட்டிலே இருந்தன என்று வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன. யுவாங் சுவாங் என்னும் சீனநாட்டுப் பௌத்தர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பௌத்த சமய ஆராய்ச்சி செய்தார். அவர் எழுதியுள்ள தமது யாத்திரைக் குறிப்பில் கீழ்க்கண்ட செய்திகள் கூறப்படுகின்றன. (யுவாங் சுவாங் கி.பி. 640இல் காஞ்சீபுரத்திற்கு வந்தார்.) காஞ்சீபுரத்திலே அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட நூறு அடி உயரம் உள்ள பௌத்த ஸ்தூபி இருந்ததையும், சோழ நாட்டிலே அசோக சக்கரவர்த்தி கட்டிய ஒரு பௌத்த விகாரை இருந்ததையும் இவர் குறிப்பிடுகிறார். அன்றியும், பாண்டி நாட்டின் தலைநகருக்கு (மதுரைக்கு) அருகிலே அசோக சக்கரவர்த்தியின் தம்பியாகிய மகேந்திரரால் கட்டப்பட்ட ஒரு சங்காராமம் (பௌத்த விகாரை) இருந்ததாகவும், அதற்குக் கிழக்கே அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபி இருந்ததாகவும், இவை இரண்டும் இவர் காலத்தில் இடிந்து சிதைந்து புல்பூண்டு முளைத்துக் காணப்பட்டன என்றும் இவர் குறிப்பிடுகிறார்.1

பர்மா தேசத்துப் பௌத்தப்பிக்குப் பரம்பரையைக் கூறுகிற வரலாறு (Talaing Records) காஞ்சீபுரத்துக்கு அருகிலே பதரதிட்டை என்னும் இடத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தம்மபாலர் என்னும் பௌத்தபிக்கு வசித்திருந்தார் என்று கூறுகிறது. இந்தத் தம்மபாலர்என்பவர் பேர்போன ஆசாரிய தம்மபாலர் ஆவர். இவர் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ப் பௌத்த பிக்ஷு. இவர், பௌத்த வேதமாகிய திரிபிடகத்தின் சில பகுதிகளுக்குப் பாலி மொழியில் உரை எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர். தாம் எழுதிய உரைநூல்களில் ஒன்றாகிய நெட்டி அட்டகதா என்னும் நூலில், அசோக சக்கரவர்த்தியால் கட்டப்