உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்

தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்துவிட்ட போதிலும், அதன் பெரிய கொள்கைகளில் பல, நாளிது வரைஇந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் காள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப் படுகின்றன. அவ்வக் காலத்தில் நடைமுறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக் கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டு, 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவு கூரற்பாலது. இது நிற்க.

பௌத்த மதக் கொள்கைகள் பல இந்து மதத்தில் நின்று நிலவுகின்றனவென்று சொன்னோம். அவை எவை என்பதை இங்கு ஆராய்வோம். இக்காலத்தில் இந்துக்கள் அவை பௌத்த மதக் கொள்கைகள் என்பதை முழுவதும் மறந்துவிட்டார்கள். இந்து மதத்தில் காணப்படும் பௌத்த மதக் கொள்கைகளாவன:

1. புத்தரை அவதாரமாக ஏற்றுக் கொண்டது

இந்து மதம் பௌத்தமதத்தை அழித்துவிட்ட போதிலும், அந்த மதத்தை உண்டாக்கிய புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அஃதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக் கொண்டுவிட்டது. ஏன் ஒப்புக் கொண்டது? புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பௌத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டது போலும்!

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக் கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவசமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா அல்லது ஐயனார் என்னும் பெயருடன்