உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர், அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பௌத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றிவிட்டனர். அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநயாகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றிவிட்டார்கள். துடித லோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதி சத்துவர், புத்தராக மாயா தேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளை யானைக் கன்று உருவமாக வந்தார் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பௌத்தமதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளை யார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன். பழைய சைவசமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி. 6ஆம் நூற்றாண் டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவசமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்ட தென்றும் சைவப் பெரியார் உயர்திரு. மறைமலை யடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டுக் கருதத்தக்கது. (தொடர்புரை 3 காண்க.) 2. பௌத்தச் சிறுதெய்வங்களை இந்துமதம் ஏற்றுக் கொண்டது

மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி முதலிய சிறு தெய் வங்கள் பண்டைக்காலத்தில் பௌத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில்களை இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக் கொண்டு, இவைகளுக்குக் காளி, பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப்பெயர்கள் சூட்டிக் கிராம தேவதைகளாக்கிக் கொண்டனர். காஞ்சிபுரத்தில் வீடுபேறடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சி யம்மன் ஆலயம் பௌத்தரின் தாராதேவியம்மன் கோயில் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். அவ்வாறே, ஆங்காங்குத் திரெளபதை யம்மன் ஆலயம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் ஆலயங்கள் எல்லாம் பண்டைக் காலத்தில் தாராதேவியாலயங்களாக இருந்தன என்றும் கூறுவர். (மணிமேகலை, சம்பாபதி முதலிய பௌத்தத் தெய்வங்களைப் பற்றிய தொடர்புரை 4 காண்க.)