உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

3. வேள்வியில் உயிர்க் கொலை நீக்கியது

91

யாகங்களில் ஆடு மாடு முதலியவற்றைக் கொல்வது பெரும் பாவமென்பது பௌத்தமதக் கொள்கை. அதற்கு நேர்மாறாக, யாகங்களில் ஆடு மாடு குதிரை முதலியவற்றைப் பலியிட வேண்டு மென்பது வைதிகப் பிராமண மதக் கொள்கையாக இருந்தது. கடைசியாக, வைதீக பிராமண மதம் தனது கொள்கையைவிட்டுக் கொடுத்து, பௌத்த மதக் கொள்கையாகிய கொல்லாமையை ஏற்றுக் கொண்டது. அன்றியும், பிராமணர் மாமிசம் உண்டு வந்தமையும் நிறுத்திச் ‘சைவ' உணவை உண்ணும்படி செய்ததும் பௌத்தமதம் தான். வைதீக மதத்தார் மாமிசம் உண்பதையும் யாகங்களில் உயிர்க் கொலை செய்வதையும் தடுத்து, அவற்றை நிறுத்தச் செய்த பெருமை பௌத்த மதத்திற்கு மட்டுமன்று, ஆருகத மதத்திற்கும் உரியதாகும்.

4. அரச மரத்தைத் தொழுதல்

‘போதி' என்னும் அரசமரம் பௌத்தர்களுக்குப் புனித மானது. ஏனென்றால், அரச மரத்தடியில் இருந்து தியானஞ் செய்தபோது புத்தருக்கு மெய்யறிவு உண்டாயிற்று. ஆகையால், பௌத்தர்கள் அரச மரத்தைப் புத்தரைப் போலவே போற்றி வணங்குவர். புத்தரைக் கூறும் போது ‘மருள் அறுத்த பெரும் போதி மாதவன்' என்றும், 'பவளச் செஞ்சுடர் மரகதப் பாசடை, பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதியந் திருநிழற் புனிதன்' என்றும், 'பாசடைப் போதிப் பேரருள் வாமன்’ என்றும், ‘வாடாப் போதி மரகதப் பாசடை மரிநிழல் அமர்ந்தோன்' என்றும், அரசமரத்துடன் அவரைத் தொடர்புபடுத்தியே நூல்கள் கூறுகின்றன. பௌத்தரைப் 'போதியர்' (அரசமரத்தைத் தொழு வோர்) என்று தேவாரம் கூறுகின்றது. சங்ககாலத்திலிருந்த ஒரு பௌத்தப் புலவருக்கு 'இளம்போதியார் என்னும் பெயர் இருந்ததும் ஈண்டு நினைவு கூரற்பாலது. அன்றியும், 'புத்தர் மேல் பக்திக்குக் காரணமான போதி விருட்சம் நின்னால் (பௌத்தரால்) புத்தனோபாதி (புத்த சம்பந்த மானது) என்று தொழப்பட்டவாறு போல, எனவும் ‘புத்த பத்தி நிமித்தமாகப் போதிவிருட்சம் தொழு மாறு போல்' எனவும் வருகின்ற நீலகேசி உரைப்பகுதிகளாலும் பௌத்தர் அரசமரத்தைத் தொழுதுவந்த செய்தி அறியப்படும். இந்துமதம் பௌத்த மதத்தை அழித்துவிட்டதெனினும், பௌத்த மதக் கொள்கையாகிய அரசமர வணக்கம் ஒழிக்கப்படாமல், இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது. அரசமரத்தை வலம் வந்து