உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மணிப்பிரவாள வரலாறு

1

பௌத்த மதமும் ஜைன மதமும் வடநாட்டிலே தோன்றிய மதங்கள். ஆகவே, அந்த மதநூல்கள், வடநாட்டில் வழங்கிய பாகத (பிராகிருத) மொழிகளில் எழுதப்பட்டன. பண்டைக் காலத்திலே, பௌத்த ஜைனர்கள் வடமொழி எனப்படும். சம்ஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை எழுதவில்லை. ஏனென்றால், சம்ஸ்கிருத மொழி, பொது ஜனங்களால் பேசப்படாத (கற்றவர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காத) பேச்சு வழக்கற்ற மொழியாக இருந்தது. ஆகவே, பொதுமக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய பேச்சு வழக்கில் இருந்த பிராகிருத மொழிகளிலே பௌத்த ஜைனர்கள் தமது மத நூல்களை அக்காலத்தில் எழுதி வைத்தார்கள். பௌத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும் ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூர சேனியையும் தமது 'தெய்வ’ மொழியாகக்கொண்டு அம் மொழிகளிலே தமது மதநூல்களை எழுதி வைத்தபடியினாலே, தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மதநூல்களைப் பயில வேண்டியதாயிற்று. அந்தப் பிரா கிருத மொழிகளிலே, சம்ஸ்கிருத மொழியில் உள்ளது போன்று, நான்கு நகரங்களும் நான்கு டகரங்களும், இரண்டு சகரங்களும், இரண்டு ஜகரங்களும், ஷ, க்ஷ, ஸ, ஹ முதலிய எழுத்துக்களும் உள்ளபடியினாலே, அவ்வெழுத்துக்கள் இல்லாத தமிழ்மொழியிலே அந்தப் பிராகிருத பாஷைகளை எழுதிப் படிக்க முடியவில்லை. ஆகவே, பௌத்த ஜைனர்கள் தமது சமயநூல்கள் எழுதப்பட்ட பிராகிருத மொழிகளைத் தமிழருக்குக் கற்பிக்க வேண்டிப் புதிதாக ஒருவகை எழுத்துக்களை உண்டாக்கினார்கள். பிராமி எழுத்துக்களிலிருந்து புதிதாக உண்டாக்கப் பட்ட அவ்வெழுத்துக் களுக்குக் கிரந்த எழுத்துக்கள் என்பது பெயர். இவ்வாறு பிராகிருத மொழிகள் முதன்முதல் தமிழ்நாட்டிலே பயிலப் படுவதற்குக் காரணமாக இருந்தவர் பௌத்த ஜைனர்களே.

(இடைக்காலத்திலே கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பௌத்த ஜைன மதங்கள் செல்வாக்கிழந்து பிராமண மதம் செல்வாக்குப் பெற்ற காலத்திலே, பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சம்ஸ்கிருத மொழிக்கு ஆதிக்கம் ஏற்பட்டது. அப்போது பௌத்தர் களும் (முக்கியமாக மகாயான பௌத்தர்களும்) ஜைனர்களும் தமது மதநூல்களை வடமொழியில் எழுதி வைத்தார்கள்.)