உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

இதனால், பாகத மொழிகளைத் தமிழ்நாட்டிலே பயிலச் செய்தவர் பௌத்த ஜைனர்கள் என்பதும், அவர்கள் மூலமாகத் தமிழ்மொழியிலே சில பாகதச் சொற்கள் கலந்தன என்பதும், தமிழ் பாகத மொழிகளைக் கற்பதற்காக அவர்கள் கிரந்த எழுத்துக்களை உண்டாக்கினார்கள் என்பதும், இடைக்காலத்திலே, பிராமணீயம் ஆதிக்கம் பெற்று சம்ஸ்கிருதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பௌத்த ஜைனரும் சம்ஸ்கிருதத்தில் நூல்களை இயற்றினார்கள் என்பதும், அன்றியும் அவர்கள் மணிப்பிரவாள நடையைத் தமிழில் அமைத்து மணிப்பிரவாள உரைநடை நூல்களை இயற்றினார்கள் என்பதும், இப்போதும் மணிப் பிரவாள நடை வழக்கொழிந்து விட்டதென்பதும் கூறப்பட்டன.

6

இந்தச் சரித்திர வரலாற்றினை அறியாதவர்கள், தமிழ் மொழி ஆராய்ச்சி செய்கிறபோது, தமிழிலே பிராகிருத மொழிச் சொற்கள் நேராகக் கலந்திருப்பதை உணராமல், அச் சொற்கள் சம்ஸ்கிருத மொழி வாயிலாகக் கலந்தன என்று தவறாக முடிவு கட்டுகிறார்கள். முதலில் பௌத்த ஜைனர்கள் வழியாகப் பிராகிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச்சொற்கள் கலந்தன; சம்ஸ்கிருத மொழிச்சொற்கள் சில பிற்காலத்தில் நுழைந்தன என்னும் சரித்திர உண்மையை மனத்திற் கொண்டு மொழியாராய்ச்சி செய்ய முற்படுவோர் உண்மையைக் காண்பார்கள். இவ்வாறு மொழியாராய்ச்சி செய்வோர், தமிழ் மொழியை நன்கு கற்றிருக்க வேண்டியதோடு பிராகிருத மொழிகளையும் சம்ஸ் கிருத மொழியையும் கற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உண்மை காண முடியும்.