உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

105

வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூலிலே மணிப்பிரவாள நடை குறிப்பிடப்படுகிறது.

இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை நடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின் இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கவியின் தொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே”

என வரும் வீரசோழியம், அலங்காரப்படலச் செய்யுள் 40 காண்க. ஜைனமதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்துவிடாமல் ப்போது இருக்கிறபடியினாலே, அவர்கள் இயற்றிய ஸ்ரீபுராணம் முதலிய மணிப்பிரவாள உரைநடை நூல்கள் இன்னும் வழங்கப்படுகின்றன.

பிற்காலத்திலே, கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், வைணவ சமயத்தார், ஆழ்வார்கள் அருளிய தூய செந்தமிழ்ப் பாக்களுக்கு உரை யெழுதியபோது, பௌத்தர்களையும் சமணர்களையும் பின்பற்றி, மணிப்பிரவாள நடையில் உரைகளை (வியாக்கியானங்களை) எழுதினார்கள். அவர்கள் எழுதிய மணிப்பிரவாள உரை நூல்கள், படிப்பார் இல்லாமல் இப்போது பயனற்றுக் கிடக்கின்றன. ஏனென்றால், சம்ஸ்கிருதம் படித்தவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால், அவர்களுக்கு மணிப்பிரவாளம் விளங்குவதில்லை. தமிழ்மொழி படித்தவர்களுக்கும் சம்ஸ்கிருதம் தெரியாதாகையினாலே, அவர்களுக்கும் மணிப்பிரவாளம் விளங்குகிறதில்லை. வடமொழி தமிழ்மொழி இரண்டையும் கற்றவர்களோ மிகமிகச் சொற்பமானவர். ஆயிரத்தில் ஒருவராவது இரண்டையும் கற்றவர் உளரோ என்பதே ஐயத்திற்கிடமா யிருக்கிறது. அப்படிப் படித்தவர்களிலும் வைணவப் பற்றுள்ளவர் எத்தனை பேர்? இவ்வாறு, நாலாயிரப் பிரபந்தத்தின் மணிப்பிரவாள உரை, இருந்தும் இறந்த நூலாக இருக்கிறது. இது, தமிழ்நாட்டிலே மணிப் பிரவாள நடைக்கு இடமில்லை என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக விளங்குகிறது. மணிப்பிரவாள நடை, வடமொழி கற்றவருக்கும் விளங்காமல் தமிழ்மொழி கற்றவருக்கும் விளங்காமல், ஒரு புதிய மொழியாக இருக்கிறது. ஆகவே, இப்போது சென்னைப் பல்கலைக் கழகத்தார் நாலாயிரப் பிரபந்த மணிப்பிரவாள உரைக்குத் தமிழில் விளக்க உரை எழுதி வெளியிட்டு வருகிறார்கள். மணிப்பிரவாள நடை தமிழ்மொழிக்கு வேண்டாத ஒன்றாகும்.