உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

205

இரண்டாம் நூற்றாண்டின் கடைசியில் இயற்றப்பட்ட தாதல் வேண்டும் என்பது ஐயமற விளங்குகின்றது.

மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப் பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்க இன்னும் வேறு சான்றுகள் வேண்டுவதில்லை. இனி, இந்த நூல் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் இயற்றப்பட்டதென்று கூறுவோர் காட்டும் சான்றுகளை எடுத்துக்காட்டி, அவை தக்க சான்றுகளல்ல என்பதை விளக்குவோம்.

1.

மணிமேகலையில் 'குச்சரக்குடிகை' என வரும் சொற்றொடருக்கு உரையெழுதிய டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள், 'கூர்ச்சர தேசத்துப் பணி அமைந்த சிறிய கோயில்' என்று எழுதி யிருக்கிறார்கள். இதனை உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டு ஒரு சிலர், ஏனைய ஆதாரங்களையெல்லாம் மறந்துவிட்டு, மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இயற்றப் பட்டதென்பர். அஃதாவது, கூர்ச்சரர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை என்றும், கூர்ச்சரரைக் குறிப்பிடுகிற படியால், மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்டதென்றும் கூறுவர். இந்த ஆராய்ச்சி முடிவை எதிர்த்தும், ஆதரித்தும் ‘குச்சரக் குடிகை'க்கு வேறு பொருள் கற்பித்தும் அறிஞர் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஈண்டுக் காட்டப்புகின் விரியும். ஆனால், இந்த ஆராய்ச்சி ஐயப் பாட்டுக்கு இடமான முடிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். 'குச்சரக் குடிகை தன்னகம் புக்கு' என வரும் மணிமேகலை அடிகளுக்குக் 'குஞ்சக் குண்டிகை தன்னகம் புக்கு' என்னும் பாடபேதமும் காட்டப் பட்டுள்ளது; (18ஆம் காதை, 145) இந்தப் பாடபேதம் முதற் பதிப்பில் காட்டப்படவில்லை. எதிர்வாதங்கள் எழுந்தபின்னர், பிற்பதிப்புக்களில் இந்த பாடபேதம் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பாடபேதம் முதற்பதிப்பிலேயே காட்டப்பட்டிருக்குமானால், பல ஆராய்ச்சியாளரின் காலமும் உழைப்பும் வீணாக்கப்பட்டிரா, ஆனால், முதல் பதிப்பின் பாடத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் உரையையும் தெய்வவாக்காகக் கொண்டு, ஆராய்ச்சி யாளரிற் சிலர் மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என வாதித்தனர். இந்த வாதத்தை V.A. Smith போன்ற