உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

குறைபாடுகள் காலப்போக்கில் நீக்கப்பட்டு, தமிழுக்குரிய மரபைப் பெற்று நிலை பெறுவதற்கு, ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் சென்றிருக்கக் கூடும்.

ஏறக்குறைய கி.பி. 5ஆம் நூற்றாண்டில், களபர அரசர் காலத்திலே, பௌத்த சமண சமயங்களுக்கு எதிர்ப்பாகவும், சைவ வைணவ சமயங்களுக்குச் சார்பாகவும் ஒரு புதிய இயக்கம் தோன்றிற்று. அதுதான் பக்தி இயக்கம். புறப்பொருள் இலக்கியத்தை மாற்றியமைத்து, அதாவது பகைவரைப் போரிலே கொன்று வெற்றி கொள்வதைவிட அகப்பகையை வென்று வெற்றி பெறுவது மேலானது என்னும் கொள்கையை அமைத்துப் பௌத்த சமண சமயங்கள் பிரசாரம் செய்தது போல, அகப்பொருளை மாற்றியமைத்துப் பக்தி இயக்கம் சைவ வைணவர்களால் உண்டாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கொள்கைப்படி, சிற்றின்பமாகிய அகப்பொருளுக்குப் பேரின்பமாகிய மோட்சம் கற்பிக்கப்பட்டது. ஆண்மகனும், பெண் மகளும் உண்மையாகக் காதலித்துத் தூய இன்பம் துய்ப்பது போல, இந்த அகப்பொருளையே உயர்ந்த பொருளில் அமைத்து, மனித உயிரைத் தலைவியாகவும் கடவுளைத் தலைவனாகவும் அமைத்துப் பக்தி செய்து பேரின்ப மோட்சத்தை அடையக் கூடும் என்பதே பக்தி இயக்கத்தின் சாரம் ஆகும். இந்தப் பக்தி இயக்கத்தை அடிப்படை யாகக் கொண்டு, ஆழ்வார்களும் நாயன்மார்களும் அகப்பொருள் துறையமையச் செய்யுள்களை இயற்றினார்கள்.

ஆனால், இந்த இயக்கத்தை, பக்தியினால் முத்தி பெறலாம் என்ற கொள்கையைப் பௌத்த சைனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் மத நூல்களில் அகப்பொருள் துறையமைத்து நூல்கள் இயற்றவில்லை. சிற்றின்பமாகிய அகப்பொருளைப் பேரின்பமாகிய மோட்சத்துடன் இணைக்கும் கருத்து தொல்காப்பியத்தில் இல்லை. ஆகையினால், இறையனார் அகப்பொருள் என்னும் ஒரு புதிய நூலைப் பக்தி இயக்கத்தார் பிற்காலத்தில் உண்டாக்கிக் கொண்டார்கள்.

ஏறத்தாழ கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசன் காஞ்சீபுரத்தை அரசாண்டான். அவன் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று, களபர அரசனை வென்று, சோழ நாட்டைத் தொண்டை மண்டலத்தோடு சேர்த்துக்