உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை

63

கௌதம முனிவரிடம் சீடராக இருக்க விரும்பி இவ்விடம் வந்தவர்கள். பல இடங்களில் சுற்றித்திரிந்த இந்தத் துறவிகள் கடைசியாகக் கௌதம முனிவர் தங்கியிருந்த வனத்தை யடைந்து இவரிடம் தங்கிச் சீடராக அமர்ந்து இவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார்கள்.

கௌதமரின் மைத்ரீபாவனை

நேரஞ்சர ஆற்றங்கரையில் தங்கிய கௌதம முனிவர் மைத்ரீ தியானம் செய்துகொண்டு காலங்கழித்தார். அப்போது, பிராமணர்களும் சிரமணர்களும் காடுகளில் தனித்து வசிக்கும் போது அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன என்று கூறுகிறார்களே, அதன் காரணம் என்ன என்பதை இவர் ஆராய்ந்து பார்த்தார். ஆராய்ந்த போது இவருக்கு உண்மை புலப்பட்டது. மனம் வாக்குக் காயங்களில் குற்றம் இருப்பதனாலே இவ்வாறு அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன என்பதை அறிந்தார்.

தம்மிடம் மனம் வாக்குக் காயங்களில் குற்றம் உள்ளனவா என்று சிந்தித்துப் பார்த்துத் தம்மிடம் குற்றம் இல்லை என்றும் குற்றத்திற்கு மாறாகக் குணங்களே உள்ளன என்றும் கண்டார். அதாவது தம்மிடத் திலே மனம் வாக்குக் காயங்களில் குற்றம் இல்லாததோடு அச்சமின்மை, தைரியமுடைமை, தன்னைப் பிறரைவிட உயர்ந்தவர் என்றும் பிறரைத் தாழ்ந்தவர் என்றும் கருதாமை, அன்புடைமை (மைத்ரீ) என்னும் நற்குணங்கள் தம்மிடம் இருப்பதைக் கண்டார்.

பிறகு, அட்டமி, பாட்டியம், பௌர்ணமி முதலிய நாட்களிலே இரவுக் காலத்தில் ஆராம சயித்தியம், வனசயித்தியம், விருக்ஷ சயித்தியம் என்னும் மூன்று வகையான இடங்களில் தனித்து இருந்தால் அச்சம் உண்டாகும் என்று கூறுகிறார்களே, அதன் காரணம் என்ன என்பதை ஆராயவேண்டும் என்று எண்ணங்கொண்டார். ஆகவே, அந் நாட்களில் இரவு வேளையில் அவ்விடங்களுக்குத் தனியே சென்று தங்கினார். அப்படித் தங்கியபோது நள்ளிரவிலே அவ்விடத்தில் ஒரு மான் வந்தது. பின்னர் ஒரு பறவை வந்தது. பின்னர் காய்ந்து உலர்ந்து இற்றுப் போன மரக்கிளையொன்று மரத்திலிருந்து ஒடிந்து விழுந்தது. பின்னர் இலைகள் சலசலவென்னும் ஓசையுடன் அசைந்தன.

இவைகளை அனுபவ வாயிலாகக் கண்ட கௌதம முனிவர், இரவு வேளைகளிலே இந்த இடங்களிலே அச்சத்தை உண்டாக்குகிற காரணங்கள் இவைதாம் என்பதை அறிந்து இவ்விதமான காரணங்களினால் ஏற்படும்