உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீட்டுநெருப்பை அயலாருக்குக்

கொடுக்காதே

கோசல நாட்டின் தலைநகரமான சிராவத்தி நகரத்திலே மிகாரர் என்னும் செல்வச்சீமான் ஒருவர் இருந்தார். இவருடைய மகன் பெயர் புண்ணிய வர்த்தன குமாரன். இவன் வாலிப வயதடைந்து திருமணம் செய்வதற்கு உரிய வயதை அடைந்தான். ஆகவே, பெருஞ் செல்வ ராகிய மிகாரர் இவனுக்குத் திருமணம் செய்துவைக்க முனைந்தார். முதலில் புண்ணியவர்த்தன குமாரன் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று கூறினான். இது எல்லா வாலிபர்களும் வழக்கமாகக் கூறுகிற வெற்றுப் பேச்சு என்பதைப் பிரபு அறிவார். ஆகையினாலே, தன் மகனுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக அவன் எப்படிப்பட்ட மங்கையை மணம்செய்ய விரும்புகிறான் என்பதை அறிந்து கொண்டார். ஐந்து சிறப்பு களும் ஒருங்கே அமையப்பெற்ற மங்கையைத்தான் மணம் செய்ய விரும்புவதாக அவன் தெரிவித்தான். ஐந்து சிறப்புகளாவன: மயிர் அழகு, சதை அழகு, எலும்பழகு, தோல் அழகு, இளமை அழகு என்பன.

மயிர் அழகு என்பது, மயில் தோகைபோன்று அடர்ந்து நீண்ட கூந்தலைப் பெற்றிருத்தல், கூந்தலை அவிழ்த்து விட்டால் அது கணைக்கால் வரையில் நீண்டு தொங்குவதோடு நுனியில் மேற் புறமாகச் சுருண்டிருக்க வேண்டும். சதையழகு என்பது, வாய் இதழ், கொவ்வைக் கனி (கோவைப் பழம்) போலச் சிவந்து மென்மையாக இருத்தல், எலும்பழகு என்பது, முத்துப் போன்ற வெண்மையான பற்கள் ஒழுங்காகவும், அழகாகவும், வரிசையாகவும் அமைந்திருத்தல், தோல் அழகு என்பது, உடம்பின் மேனி அழகாகவும் செவ்வல்லி மலரைப் போன்று மென்மையாகவும் இருத்தல். இளமை அழகு என்பது, பத்துப் பிள்ளைகளைப் பெற்ற போதிலும் ஒரே குழந்தை பெற்றவள்போல, உடம்பு தளராமல் இளமையோடு இருத்தல்.

இவ்விதமாக ஐந்து பண்புகளும் ஒன்றாக அமையப் பெற்ற பெண்ணைத் தவிர வேறு ஒருத்தியைத் தான் மணம்செய்ய முடியா தென்று அவன் திட்டமாகக் கூறினான். ஆகவே, இப்படிப்பட்ட தன்மை வாய்ந்த பெண் எங்கேனும் இருக்கிறாளா என்று பிரபு