உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

காற்றடித்தால் என்ன? மழை பெய்தால் என்ன? காட்டில் உதவியில்லாமல் மரத்தடியில் இருந்தால்தான் என்ன? இவற்றை எல்லாம் இயற்கை எண்ணிப் பார்க்கிறதா? பிரசவ வேதனை மும்முரமாக இருந்தது. காட்டில் சென்ற கணவன் இன்னும் வரவில்லை. மழையும் விடவில்லை. பிரசவ நோய் பலப்பட்டுக் கடைசியாகப் பிள்ளைப் பேறும் உண்டாயிற்று. பிறந்த பச்சிளங் குழந்தையை மழையில் நனையாதபடி மார்பில் அனைத்துக் கொண்டு மற்றக் குழந்தையையும் அருகில் அணைத்துக் கொண்டு கவிழ்ந்து குனிந்து கொண்டாள். மழை கொட்டு கொட்டு என்று கொட்டிக்கொண்டிருந்தது. போன ஆள் இன்னும் திரும்பிவரவில்லை. அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டதா? அல்லது அவளைக் கைவிட்டு எங்கேனும் போய் விட்டானா? தான் நேசித்த தன் கணவன் தன்னை இந்நிலையில் கைவிட்டுப் போய்விட்டிருந்தால்...? இதை நினைக்கும்போது அவளுக்குக் கழுத்தைக் கத்தி கொண்டறுப்பது போலத் தோன்றியது. ஆதரவு அற்ற நிலையில், நடுக்காட்டில், இரவு வேளையில், காற்று மழையில் நனைந்துகொண்டு பிரசவம் செய்யும் கொடுந்துன்பத்தை விட மிகமிகக் கொடுந்துன்பமாகத் தோன்றியது. அவன் அவளைக் கைவிட்டான் என்னும் எண்ணம். அவள் உடம்பைக் காற்றும் மழையும் தாக்கியது அவளுக்குத் துன்பமாகத் தோன்றவில்லை. தன் கணவன் தன்னைக் கை விட்டானோ என்னும் ஐயம், அவள் மனத்திலே பெரும் புயலை வீசி அவளைப் பெருந் துன்பத்திற்குள்ளாக்கிற்று. இந்த நிலையிலே உறக்கமின்றிக் காற்றிலும் மழையிலும் நனைந்துகொண்டு, பறவை குஞ்சுகளைச் சிறகுகளால் அணைத்துக்கொள்வது போல, தன் குழந்தைகளை மார்பில் அணைத்துக்கொண்டு, இரவைக் கழித்தாள். கடைசியாக அந்த நீண்ட இரவு கழிந்து, பொழுது விடியத் தொடங்கிற்று. மழையும் ஓய்ந்து நின்றது. ஆனால், காற்று சில்லென்று வீசிற்று.

தன் கணவன் திரும்பி வராதது அவள் மனத்தை வாள் கொண்டு அறுப்பதுபோல இருந்தது. காலை வெளிச்சத்தில் அவள் குழந்தை களுடன் அவனைத் தேடத் தொடங்கினாள். அவன் சென்ற திசையாகச் சென்று தேடினாள். சிறிது தூரத்திலே ஒரு மேட்டின் மேல் ஓர் ஆள் விழுந்து கிடப்பதைக் கண்டாள். ஓடோடி அருகில் சென்று பார்த்தாள். அந்தோ! தன் கணவன் பிணமாகக் கிடப்பதைக் கண்டாள். அவன் பக்கத்தில் புல் கட்டுகள் கிடந்தன. வெட்டிப் போடப்பட்ட சில களைகளும் கிடந்தன. அவன் காலில் இரத்தம் வடிந்திருந்தது. அருகில்