உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. படசாரி

காட்டின் வழியே கணவனும் மனைவியும் தனியே நடந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்டுப்பாதை சிராவத்தி நகரத்திற்குப் போகிறது. இவ்வழிப்போக்கரும் சிராவத்தி நகரத்திற்குத்தான் போகிறார்கள். நடையுடை பாவனைகளில் தொழிலாளி போலக் காணப்படும் அவள் கணவன், தூங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வயதுக் குழந்தையைத் தன் மார்பில் சார்த்திக் கொண்டு வழி நடக்கிறான். அவனுடன் செல்லும் அவன் மனைவி இளவயதுள்ளவள். பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்போல் காணப்படுகிறாள். முழுக் கர்ப்பவதியாகையால் விரைந்து நடக்க முடியாமல் மெல்ல நடக்கிறாள். கண்ணுக்கெட்டியவரையில் நெடுந்தூரம் காடாக இருக்கும் இந்த இடத்திலே, மனிதரைக் காண முடியவில்லை. மரங்களில் காட்டுப் புறாக் களும் மைனா முதலிய பறவைகளும் பாடிக் கொண்டிருக்கின்றன.

"

திடீரென்று சூரியனை மேகங்கள் மறைத்துவிட்டன. காற்று வீசத் தொடங்கியது. தூறல் தூறத் தொடங்கிற்று. இச்சமயத்தில் அப் பெண்மணி, தன் கணவனிடம் வயிறு வலிக்கிறது என்று கூறினாள். நன்றாக மழை பெய்யும்போல் தோன்றுகிறது. நடுக்காட்டில், மக்கள் நடமாடாத இடத்தில், மழை பெய்கிற வேளையில், அவளுக்குப் பிரசவ காலம் ஆரம்பித்து விட்டது. தங்குவதற்கு அங்கே இடம் இல்லை. இடம் காலம் இரண்டும் தனக்கு மாறுபட்டுப் பகையாக இருப்பதைக் கண்டு என்ன செய்வதென்று தோன்றாமல் அவன் திகைத்தான். வீட்டிலேயே தங்கியிருந்தால் இந்தச் சங்கடம் ஒன்றுமில்லையே என்று எண்ணினான். அவன் மார்பில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது. "சிறு குடிசை ஒன்றைக் கட்டுங்கள்” என்றாள் அவள். ஆம், அதைத் தவிர வேறு வழியில்லை. குழந்தையையும் அவளையும் ஒரு வேப்ப மரத் தடியில் விட்டுவிட்டு, குடிசை கட்டக் கிளைகளையும் புல்லையும் கொண்டுவர விரைந்து சென்றான். தூறலாக இருந்த மழை நன்றாகப் பெய்யத் தொடங்கிற்று.

அவளுக்கும் பிள்ளைப்பேறு தொடங்கிவிட்டது. வயிறு நொந்தது. அந்தோ பாவம்! உதவி செய்ய அருகில் ஒருவரும் இலர்.