உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

போதித்தருள வேண்டும். இந்த வரங்களைப் பகவர் அருள்வாரானால் அடியேன் அணுக்கத் தொண்டனாக இருந்து ஊழியம் செய்யச் சித்தமாயிருக்கிறேன்" என்று பணிவோடு கேட்டுக்கொண்டார்.

பகவன் புத்தர் அவர் கேட்ட எட்டு வரங்களையும் அளித்தார். ஆகவே, ஆனந்த தேரர் அன்று முதல் பகவருக்குப் பணிவிடை செய்து வந்தார். பல் தேய்க்கக் குச்சியும் கை கால் கழுவ நீரும் கொண்டுவந்து கொடுப்பார். செல்லும் இடங்களுக்கு உடன் செல்வார். பகவர் தங்கி இருக்கும் இடத்தைத் திருவலகு இட்டுச் சுத்தம் செய்வார். அருகிலே இருந்து குற்றேவல் செய்வார். இரவில் ஒன்பது தடவைகளில் தடியையும் விளக்கையும் எடுத்துக்கொண்டு கந்தகுடியைச் சுற்றிவருவார். கூப்பிடும் போதெல்லாம் ஏனென்று கேட்பார். இவ்வாறு ஆனந்த தேரர், பகவன் புத்தருக்குக் குற்றேவல் செய்யும் அணுக்கத் ணுக்கத் தொண்டராக தொண்டராக இருந்தார். இருந்தார். இவருடைய ஊழியத்தைப் பாராட்டிப் பகவன் புத்தர் ஐந்து சிறந்த குணங்களையுடையவர் இவரென்று புகழ்ந்துள்ளார். கல்வியுடைமை, மனம் விழிப்போடிருத்தல், நடக்கும் ஆற்றல், உறுதியுடைமை, மறதியின்மை என்னும் ஐந்து குணங்கள் இவரிடம் உள்ளன என்று பகவன் புத்தர் இவரைப் பாராட்டினார்.

ஆனந்த தேரர் பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைகிற வரையில் அவர் உடன் இருந்து அவருக்குத் தொண்டு செய்து வந்தார்.

பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த சில திங்களுக்குப் பின்னர் அவருடைய சீடர்களான தேரர்கள் ஐந்நூறு பேர், ராஜகிருஹ நகரத்துக்கு அருகிலேயிருந்த ஸத்தபணி என்னும் மலைக் குகையிலே ஒன்று கூடி முதலாவது பௌத்த மகா நாட்டை நடத்தினார்கள். புத்தர் பெருமான் அருளிச்செய்த உபதேசங்களைத் தொகுப்பதற்காக அந்த மகாநாடு கூட்டப் பட்டது. அந்த மகாநாட்டில், புத்தர் அருளிய தர்ம போதனைகளை அவருடைய அணுக்கத் தொண்டராயிருந்த ஆனந்த தேரர் ஓதினார். இவர் ஓதியவற்றை ஒன்று சேர்த்துத் தம்ம பிடகம் என்று பெயர் இட்டனர். பௌத்தர்களின் மூன்று மறை நூல்களில் தம்ம பிடகமும் (அபிதம்ம பிடகம்) ஒன்று.