உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

என்று அவள் அவனிடம் சொன்னாள். ஆனால், அவனுக்கு அழைத்துச் செல்ல மனமில்லை. ஆகவே, நாளைக்காகட்டும், பிறகு ஆகட்டும் என்று காலங் கடத்திக் கொண்டிருந்தான். பிரசவ காலம் நெருங்கி விட்டதையும் தன் கணவன் தன்னைத் தாய் வீட்டுக்கழைத்துக் கொண்டு போக மனமில்லாம லிருப்பதையும் அறிந்த அவள், தன்தாய் வீட்டிற்குப் (சிராவத்தி நகரத்திற்கு) போவதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டுத் தன்னந் தனியே புறப்பட்டுச் சன்றாள். செல்லும் வழியில் ஒரு கிராமத்தையடைந்தபோது அவளுக்குப் பிரசவ வேதனை உண்டாயிற்று. அந்தக் கிராமத்திலே ஒரு வீட்டிலே தங்கி ஒரு குழந்தையைப் பெற்றாள். பிள்ளைப் பேறு உண்டாகிவிட்டபடியால் இனி, தன் தாய் வீடு போவது பயனற்றது என்று கருதி அவள் குழந்தையுடன் தன் கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அவள் வயிறு வாய்த்துச் சூல் கொண்டாள். ஒன்பது மாதம் நிறைந்து பத்தாவது மாதம் ஆனபோது, தன் தாய் வீட்டில் போய் பிள்ளைப் பேறு பெறவேண்டு மென்று விரும்பினாள். தன் விருப்பத்தைக் கணவனிடம் கூறினாள். அவளை அவள் பெற்றோரிடம் அனுப்ப அவனுக்கும் விருப்பந்தான். ஆனால், அவர்கள் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டான். ஆகட்டும், ஆகட்டும் என்று சில நாட்களைக் கழித்தான். பிரசவ காலம் நெருங்கவே அவன் அவளைச் சிராவத்தி நகரம் அழைத்துக் கொண்டு போக உடன்பட்டுக் குழந்தையையும் அவளையும் அழைத்துக் கொண்டு போனான். ஏழை ஆகையால் வண்டியில் போக முடியாமல் கால்நடையாகவே அழைத்துச் சென்றான். பல கிராமங்களைக் கடந்து, சிராவத்தி நகரத்திற்கு மூன்று கல் தூரத்தை யடைந்தான்; அவ்விடம் காட்டு வழி. அக்காட்டு வழியைக் கடந்தால் சிராவத்தி நகரத்தை யடையலாம். காட்டு வழியாக வரும்போதுதான் மேலே கூறியபடி விடா மழை பிடித்துக்கொண்டது. பிரசவ வேதனையும் உண்டாயிற்று. அவள் தங்கிப் பிள்ளைப்பேறு பெறுவதற்காகச் சிறு குடிசை ஒன்றைக் கட்டுவதற்காகக் காட்டில் சென்றான். சென்று கிளையை வெட்டும் போது பாம்பு கடித்து இறந்துவிட்டான். அவளும் மழையிலும் காற்றிலும் நனைந்துகொண்டு மரத்தடியில் நள்ளிரவில் தன்னந் தனியளாய்ப் பிள்ளையைப் பெற்றாள். பொழுது விடிந்ததும் அவனைத் தேடிக் கொண்டுபோய், பாம்பு கடித்து இறந்து கிடப்பதைக் கண்டாள்.