உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் 53

6

“குழந்தாய் எழுந்திரு” என்று அருளினார் பகவர். அவள் எழுந்து நின்று, தன் மனத்தில் பதிந்து கிடக்கும் துயரத்தை அவருக்குக் கூறினாள். தன் கணவர் பாம்பு கடித்து இறந்ததையும் ஒரு குழந்தையைக் கழுகு தூக்கிக்கொண்டு போனதையும் இன்னொரு குழந்தையை வெள்ளம்கொண்டு போனதையும், தன் தாயும் தந்தையும் தம்பியும் வீடு இடிந்து விழுந்து இறந்து போனதையும் அவள் அவரிடம் கூறிக் கண்ணீர் உகுத்து மனம் புழுங்கினாள்.

கனிவோடு கேட்ட பகவர் அருளினார்: “குழந்தாய்! நீயடைந் துள்ள துன்பம் பெரிதுதான். நீ சிந்திய கண்ணீரும் பெரிது. சற்றுச் சிந்தித்துப் பார்; பிறந்தவர் இறப்பது உலக இயற்கை. இதற்கு முந்திய பிறப்புக்களில் நீ உன் சுற்றத் தாருக்காகக் சிந்திய கண்ணீரைக் கணக்குப் பார்த்தால் அது ஒரு கடலுக்குச் சமானம் ஆகும். மனம் கலங்காதே. அறிவைச் சிதற விடாதே. உலக வாழ்வின் இயல்பைச் சிந்தித்துப் பார். பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம். பிறவார் உறுவது பெரும் பேரின்பம். பிறவா நிலையாகிய வீடு பேற்றை அடைவதற்கு முயற்சி செய்வாயாக” என்று அருளிச்செய்தார்.

அவள் மனம் இயற்கை நிலையை யடைந்தது. சிந்தித்துப் பார்த்துப் பகுத்தறியும் நிலையை யடைந்தாள். அவளுக்கிருந்த பைத்தியம் – மனமருட்சி, நீங்கிவிட்டது.

படசாரி அன்று முதல் நாள்தோறும் பகவன் புத்தர் அருளும் திருமொழிகளைச் சிரம் வணங்கிச் செவிசாய்த்துக் கேட்டு வந்தாள். ஒரு நாள் பகவரை வணங்கித் தன்னைப் பௌத்த சங்கத்தில் சேர்த்து அருளும்படி வேண்டினாள். புத்தர் பெருமான் படசாரியைத் தேரி சங்கத்தில் அனுப்பித் துறவு கொடுக்கச் சொன்னார். தேரியரிடம் துறவு பெற்ற படசாரி முழு ஞானம் அடைந்து பேர்போன பௌத்தப் பிக்குணியாக விளங்கினாள். இறுதியில் வீடுபேற்றை யடைந்தாள்.

அடிக்குறிப்புகள்

1. அவளைப் படசாரி என்று கூறினார்கள். (படம் அல்லது படாம் - துணி நழுவின துணியோடு நடக்கிறவள் என்பது பொருள்.)