உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

சத்துருவின் மனத்தில் அதிகார வேட்கையைத் தூண்டிவிட்டான். “நீ அரசகுமாரன், இளைஞன், ஊக்கமும் ஆற்றலும் உள்ள வீரன்! நீ அரசனாக இருந்தால் மற்ற அரசர்கள் எல்லோரையும் வென்று நீ சக்கர வர்த்தியாக விளங்குவாய். இந்தக் கிழ அரசர், பிம்பசார அரசர், சிம்மா சனத்தில் அமர்ந்து வீணாகக் காலங்கழிக்கிறார். உன்னைப் போன்ற வாலிபன் அன்றோ அரசனாக அமர வேண்டும்? நீ ஏன் அரசனாகக் கூடாது? உன்னுடைய ஆற்றலையும் வீரத்தையும் திறமையையும் வீணாக்கிவிடுகிறாய். நீ மகத தேசத்தின் அரசனாகவும் நான் பௌத்த மதத்தின் தலைவனாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கிழவர்களாகிய பிம்பசார அரசனும் பகவன் புத்தரும் ஏன் பதவிகளில் இருக்கவேண்டும்? இந்தப பதவிகளில் நம்மைப் போன்ற இளைஞர்கள் அமர்ந்தால் எவ்வளவோ காரியங்களைச் செய்யலாமே" என்று பேசினான்.

தேவதத்தன் பேசிய வார்த்தைகள், அஜாதசத்துருவின் மனத்தில் அதிகார வேட்கையையும் அரச பதவி ஆசையையும் தூண்டிவிட்டன. தன் தந்தையாகிய பிம்பசார அரசரைப் பதவியிலிருந்து நீக்கி மகத நாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்து, அரசாட்சியையும் அதிகாரத்தையும் தான் செலுத்தவேண்டும் என்னும் ஆசைத் தீ அவன் மனத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிற்று. உடனே அவன் செயல் ஆற்றத் தொடங்கினான்.

குற்றுவாள் ஏந்திய கையுடன் அரண்மனையிலேயே அஜாதசத் துரு இரவும் பகலும் சுற்றித் திரிந்தான். அவனுடைய கண்களும் நடவடிக்கையும் அவன் ஏதோ தகாத செயலைச் செய்யத் துணிந்தவன் போலக் காணப்பட்டன. பிம்பசார அரசர் தனித்திருக்கும்போது அந்த அறையிலே குற்றுவாளுடன் புகுவதற்குப் பல முறை முயன்றான். அவன் அவ்வாறு நுழை வதைக் காவல் சேவகர் தடுத்துவிட்டனர். அரச குமாரனுடைய நடவடிக்கைகள் காவல் சேவகர் மனத்தில் ஐயத்தை உண்டாக்கின. அவர்கள் அரசனிடம் சென்று இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். அரசர் இவர்கள் கூறியதை நம்பவில்லை “அரச குமாரன் இவ்வாறு செய்யமாட்டான். நீங்கள் ஐயப்படுவது தவறு” என்று அவர் கூறினார்.

அஜாதசத்துரு தன் எண்ணத்தை முடிக்க ஊக்கமாக இருந்தான். கட்டாரியும் கையுமாக அரசர் இருக்கும் இடங்களில் நடமாடிக்