உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

101

இவனைச் சீடனாக்கிக் கொள்ளுவதாகவும், சில ஆண்டு கழித்துத் துறவறத்தில் சேர்ப்பதாகவும் கூறி இவனைச் சீடனாக்கிக் கொண்டார். இவன் மூன்று ஆண்டு அவரிடம் சீடனாக இருந்தான். இந்த மூன்று ஆண்டுக்குள் புத்தருடைய உபதேசங்களில் முக்கியமானவை களைப் பாராயணம் செய்து கொண்டதோடு அவற்றின் கருத்தையும் தெள்ளத் தெளிய ஓதி உணர்ந்தான். அன்றியும், அறவுரைகளை ஓதி விரிவுரை செய்யவும் கற்றுக் கொண்டான்.

இவ்வாறு பௌத்த மறைகளை ஓதியுணர்ந்த குட்டிக் கண்ணர், மூன்றாண்டுக்குப் பின்னர், ஆசிரியரிடம் விடை பெற்றுப் பகவன் புத்தரை வணங்கச் சென்றார். அவந்தி நாட்டைக் கடந்து வெகு தூரத்திற் காப்பாலுள்ள ஜேதவனத்தை அடைந்தார். அங்குப் பகவன் புத்தர் எழுந்தருளியிருந்த கந்தகுடியில் சென்று புத்தர் பெருமானைக் கண்டு அடிவணங்கித் தொழுதார். பகவர் இவரை அன்புடன் வர வேற்றார். குட்டிக் கண்ணர் கந்தகுடியிலே தங்கினார். வைகறைப் பொழுதில் விழித்தெழுந்து, பகவர் உத்தரவு பெற்றுத் தான் ஓதியுணர்ந்த பௌத்த மறையை நன்கு ஓதினார். இவர் ஓதிய முறையையும் தெளிவையும் கருத்தூன்றிக் கேட்டருளிய பகவன் புத்தர், இவரைப் பெரிதும் புகழ்ந்து வியந்து மகிழ்ந்தார். அங்கிருந்த மற்றத் தேரர்களும் புகழ்ந்து மெச்சினார்கள். இதனால், இவருடைய புகழ் நாடெங்கும் பரவிற்று. அவந்திநாட்டிலே கூரராக நகரத்திலே இருந்த இவருடைய அன்னையார் காத்தியானி அம்மையார் காதிலும் இவருடைய புகழ் எட்டிற்று. “என் மகன் இந்த ஊருக்கு வருவானானால், அவனிடம் அறவுரை கேட்க வேண்டும்” என்று அம்மையார் தமக்குள் கூறிக்கொண்டார்.

சோணன் குட்டிக் கண்ணர், சில நாட்கள் பகவன் புத்தரிடம் தங்கி யிருந்து, அவர் திருக்கைகளினாலே சீவரம் பெற்றுத் துறவியானார். பின்னர், மீண்டும் அவந்தி நாட்டிற்கு வந்து தமது ஆசிரியரான மகா கச்சானரிடம் தங்கியிருந்தார். இருவரும் வழக்கம் போல, நகரத்தில் சென்று இல்லங்களில் உணவுப் பிச்சை எற்று வந்தனர். ஒரு நாள் காத்தி யானி அம்மையார் இல்லத்திற் சென்று பிச்சை ஏற்றனர். இவர்களுக்கு அம்மையார் உணவளித்த பிறகு, தாம் நெடுநாளாகக் கருதியிருந்த எண்ணத்தைத் தமது மகனான சோணன் குட்டிக் கண்ணருக்குத் தெரிவித்தார். அதாவது, தனக்கு அறவுரை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவரும் அதற்கு உடன்பட்டார்.