உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

/ 83

சிவி என்றே பெயர் சூட்டினார்கள். குழந்தை வளர்ந்து கல்வி கற்கும் வயதடைந்தபோது, தக்கசீல பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வியையும் கலைகளையும் கற்றுத் தேர்ந்து மீண்டும் தனது நாடு வந்தார். வந்து தந்தையாகிய அரசனுக்குத் தமது கல்வித் திறமைகளை எல்லாம் புலப்படுத்தினார். அரசனும் மகிழ்ச்சிகொண்டு, அவருக்கு இளவரசுப் பட்டங் கட்டினான். சிலகாலஞ் சென்றபிறகு, அரசன் காலஞ் சென்றான். அப்போது இளவரசராகிய சிவி அரசாட்சியை ஏற்று, தீமைகள் வராமல் தடுத்து மக்களுக்கு நன்மைகளைச் செய்து நாட்டைச் செம்மையாக அரசாண்டார். நகரத்தின் நான்கு வாயில்களுக்கு அருகிலும், நகரத்தின் நடுவிலும், அரண்மனைக்கு அருகிலும் ஒவ்வொரு அறச்சாலையை அமைத்து, அச்சாலைகளில் நாள் தோறும் ஆறு இலக்ஷம் பொன்னை ஏழை எளியவர்களுக்குத் தானம் வழங்கினார். வெள்ளுவா நாட்களில் அவர் அறச்சாலை களுக்குச் சென்று தானம் வழங்குவதை நேரில் கண்டுவருவார்.

முழு நிலா நாளாகிய வெள்ளுவா நாளிலே, ஒரு நாள் காலையில் வெண்கொற்றக் குடையின்கீழே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தபோது, அவ்வரசர் தமது தான தருமங்களைப் பற்றித் தமக்குள்ளே எண்ணினார். ‘நான் தானம் வழங்காத பொருள் ஒன்றும் இல்லை. எனக்குப் புறம்பாக உள்ள இந்தப் பொன்னையும் பொருளையும் தானங் கொடுப்பதைவிட, எனக்கே உரிய என் உடம்பிலுள்ள உறுப்புகளைத் தானம் செய்வதுதான் எனக்கு விருப்பம். நல்லது. இன்று நான் அறச் சாலைக்குப் போவேன். அங்கு யாரேனும் என்னுடைய உடம்பின் உறுப்புகளைத் தானங்கேட்டால் அதை வழங்குவேன். என்னுடைய இருதயத்தைக் கேட்டால் உடனே என் மார்பைப் பிளந்து அதனுள் இருக்கும் இருதயத்தைக் குளத்தில் இருக்கும் தாமரைக் கொடியை வேரொடு பிடுங்குவதுபோல, இரத்தம் சொட்டச் சொட்டப் பிடுங்கி எடுத்து அதைத் தானமாக வழங்குவேன். என் உடம்பின் தசையை யாரேனும் கேட்டால் அதையும் அரிந்து கொடுப்பேன். உடம்பில் ஓடுகிற இரத்தத்தைக் குடிக்கக் கேட்டாலும், என் இரத்தத்தை அவர்கள் வாயிலாயினும், பாத்திரத் திலாயினும் ஊற்றுவேன். ‘அடிமை வேலை செய்ய ஆள் இல்லை. நீ வந்து அடிமை வேலை செய்' என்று யாரேனும் என்னைக் கேட்டாலும், என்னையே நான் தானமாகக் கொடுத்து அவருக்கு அடிமைத் தொழில் செய்வேன். இன்னும் யாரேனும் வந்து என் கண்ணைத் தானமாகக் கொடுக்கும்படி கேட்டால்,