உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

155

விழியும் விகாரமான முகமும் அவனைப் பார்க்கும் போதே அச்சமாக இருக்கிறது. அவன் மனம் கல்லா, இரும்பா, கொடிய அரக்கன் போல இருக்கிறான். ஆடு மாடுகளைப்போல எங்களைக் கட்டி அடிப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! கண்ணா எவ்வளவு மென்மையானவள்! அவளையாவது விடுதலை செய்யுங்கள்” என்று வேண்டினான் ஜாலி. இந்தச் சொல்லைக் கேட்டும் போதிசத்துவர் ஒன்றும் பேசாமல் வாளா இருந்தார்.

அப்போது ஜாலி இவ்வாறு சொல்லி அழுதான்: “நான் சாவதாக இருந்தாலும் எனக்கு அச்சமில்லை. அம்மாவின் முகத்தைப் பார்க்காமல், அப்பாவின் முகத்தைப் பார்க்காமல் நான் எப்படிப் பிரிந்து இருப்பேன்? எங்களைப் பிரிந்து அப்பாவும் அம்மாவும் மனம் வருந்தித் துன்பப்படுவார்கள். கண்ணாவைக் காணாவிட்டால் அம்மா எவ்வளவு துன்பம் அடைவார்கள். நாங்கள் நட்டு வளர்த்த மரம் செடிகளையும், விளையாடின பொம்மைகளையும் விட்டுவிட்டுப் போகிறோம். அவைகளைப் பார்த்து அம்மாவின் மனம் எவ்வளவு துன்பம் அடையும்.

அவ்வமயம் ஜூஜூகன் வந்து சிறுவர்களை ஓட்டிக் கொண்டு போனான். போதிசத்துவருக்கு மனம் பதைத்தது. துக்கம் மூண்டது. சிங்கத்தினால் தாக்குண்ட யானையைப் போலவும், இராகுவினால் விழுங்கப்படும் நிலாவைப் போலவும் அவருடைய உடம்பு நடுங்கிற்று. துக்கம் பொறுக்கமுடியாமல் அவர் குடிசைக்குள்ளே போய் கண்களில் நீர்வழிய அழுது புலம்பினார்: 'காலையிலும் மாலையிலும் அவர்கள் பசியினால் அழும்பொழுது அவர்களுக்குப் பசிதீர யார் உணவு கொடுப்பார்? வெறுங்காலுடன் இவர்கள் அவ்வளவு தூரம் எப்படி நடந்துபோவார்கள்? என் கண் முன்பாகவே, இந்தப் பிராமணன் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கொடியினால் அடித்து ஓட்டுகிறான். திட்டியும் அடித்தும் ஓட்டுகிறான். நானோ, ஒன்றும் செய்யமுடியாமல், வலையில் அகப்பட்ட மீனைப்போலத் துடிக்கிறேன்." இவ்வாறு சொல்லிப் புலம்பினார். தம் அருமைக் குழந்தைகளின்மீது உள்ள அன்பினால், அவர்கள் படும் வேதனைகளைக்கண்டு மனம் வெம்பினார். இரக்கமில்லா அரக்கனைப்போல அவன் அடிப்பதைக் கண்டு மனம் புழுங்கினார். உடனே ஓடிப்போய், அவனைக் கொன்று போட்டு மக்களை அழைத்துக்கொண்டு வரலாமா என்று எண்ணினார்.