உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகளைப் போற்றுக*

நமது மூதாதையர் வளர்த்த அழகுக்கலைகளைப் பற்றிய வரலாற்றை மேல் வாரியாகக் கூறினோம். இக்கலைகள் குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளன. இக்கலைகள் இப்போது அழிந்து கொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் வருவதை நாம் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. ஏனென்றால், நம்மவரில் பெரும்பான்மையோருக்கு, நூற்றில் தொண்ணுற் றொன்பது பேருக்கு, கலைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இது வருந்தத் தக்க நிலையாகும்.

நமது முன்னோர் தலைமுறை தலைமுறையாக வளர்த்த கலைகளைப் போற்ற வேண்டுவது அவர் வழிவந்த நமது கடமை யாகும். கலைகளை அழித்துக் கொண்டும் அழிய விட்டுக் கொண்டும் இருப்பது, சமுதாயத்தின் வீழ்ச்சியை அல்லது பிற்போக்கைக் காட்டும் அறிகுறியாகும். ஏனென்றால், பழைய கலைகளுக்கும் சமுதாயத் திற்கும் தொடர்பு உண்டு. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கலைகளும் அதனை யொட்டிய பண்பாடுகளும் சமுதாயத்தில் பரம்பரையாகத் தொடர்ந்து வந்துகொண்டே யிருக்கின்றன. ஆகவே, நமக்கு உரிமைப் பொருளாகிய நமது அழகுக் கலைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுவது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

தொன்றுதொட்டு, பல்லாண்டு, பல்லாண்டுகளாக வளர்ந்துள்ள இக்கலைகள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

செங்கற் கட்டிடங்கள் விரைவில் அழிந்துவிடுவது இயற்கையே. கருங்கல்லினால் கட்டப்பட்ட கற்றளிகள் நெடுங்காலம் இருக்கு மானாலும், அவற்றைப் பேணிப்பாதுகாக்காமல் போனால், அவையும் காலப் போக்கில் அழிந்துவிடும். அவ்வாறு பல பல கற்றளிகள் அழிந்துவிட்டன; பல அழிந்துகொண்டு இருக்கின்றன. முதன் முதலாக

  • தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (1956) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.