உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

பாதுகாக்கவேண்டும். ஏனென்றால் பல்லவர் காலத்துக் கட்டிடங்கள் மிகச் சிலதான் இப்போது உள்ளன. இச் சிலவற்றையும் அழிந்து விடாமல் காப்பாற்ற வேண்டுவது அரசாங்கத்தினதும் நாட்டு மக்களினதும் கடமையாகும்.

பல்லவர் காலத்துக்குப் பிறகு கி. பி. 10ஆம் நூற்றாண்டு முதல் அமைக்கப்பட்ட சோழர் காலத்துக் கோயில் கட்டிடங்களும் சில அழிந்துபோயும் சில அழிந்துகொண்டும் இருக்கின்றன.

புதுப்பிக்கும் திருப்பணி

பழைய கோயில்களைப் புதுப்பிக்கிற திருப்பணியைச் செட்டி நாட்டுச் சீமான்கள் செய்து வந்தார்கள். அவர்களால் புதுப்பிக்கப் பட்ட பழைய கோயில்கள் பல. இதற்காக அவர்களைப் பாராட்டு கிறோம். ஆனால், அவர்கள் செய்த திருப்பணிகளில் சில குறைபாடுகளும் உள்ளன. குறைபாடு என்பதை விட அழிவு வேலை என்றே கூறலாம். அது என்னவென்றால் அந்தக் கோயில்களில் இருந்த பழைய சாசனக் கல்வெட்டுகளை அழித்துவிட்டது ஒன்று; பழைய சிற்பக் கலையைப் போற்றாதது மற்றொன்று.

சாசனங்களைப் போற்றல்

பழைய கோயில்களைப் புதுப்பிக்கும்போது அக்கோயில்களில் இருந்த பழைய சாசனங்களை இருந்த இடந்தெரியாமல் அழித்து விட்டார்கள். நமது நாட்டுச் சரித்திரம் எழுதுவதற்குச் சாசனங்கள் பேருதவியாக இருக்கின்றன. சாசனங்களை ஆராய்ந்து தான் நமது நாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. சாசனங்கள் சரித்திர ஆராய்ச்சிக்கு எவ்வளவு பேருதவியாய் இருக்கின்றன என்பது சரித்திர ஆராய்ச்சிக்காரருக்குத் தவிர மற்றப் பாமர மக்களுக்குச் சிறிதும் தெரியாது.

மேலும் கோயில் சாசனங்களிலே, அக்கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலபுலங்களைப் பற்றியும் பொன் பொருள்களைப் பற்றியும் குறித்து வைப்பது வழக்கம். ஆகவே இந்தச் சாசனங்கள் அக்கோயில்களின் சொத்துக்களைப்பற்றிய ஆதாரங்களாகும். அவற்றை அழித்து விடுவது, அக்கோயிலுக்குரிய பத்திரங்களையும் ஆதாரங்களையும் அழித்துவிடுவதாகும் அல்லவா? கோயில்களைப் புதுப்பிக்கும் போது, பழைய சாசனங்களை அழிக்காமல் வைக்க வேண்டும். அல்லது அவற்றின் படி எடுத்து வேறு கற்களில் எழுதி வைக்க வேண்டும்.