உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

சில சான்றுகள்

21

பண்டைக் காலத்தில் கோயில்களைப் புதுப்பிக்கும் போது, அக்கோயில் சாசனங்களைப் படி எடுத்து எழுதி வைத்தார்கள். தஞ்சை மாவட்டத்துக் கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருக்கோடிகாவல் கோயிலைப் பண்டைக்காலத்தில் புதுப்பித்தவர் செம்பியன்மாதேவி யார் என்னும் சோழகுலத்து அரசியார். இவர் உத்தமச் சோழருடைய தாயார். இவ்வரசியார் இக்கோயிலைப் புதுப்பிப்பதற்கு முன்னர், இக் கோயிலில் இருந்த சாசனங்களையெல்லாம் படி எடுத்துக் கொண்டு, கோயில் வேலை முடிந்த பிறகு அப் படிச்சாசனங்களை இங்கு அமைத்திருக்கிறார். இவ்வாறு இருபத்தாறு சாசனங்களை இவர் படியெடுத்தமைத்திருக்கிறார். இதனால், இச் சாசனங்கள் அழியாமல் இருக்கின்றன. சாசனங்களைப் படி யெடுத்து அமைத்தார் என்பதற்குச் சான்று என்ன வென்றால், அச் சாசனங்களின் தொடக்கத்தில், "ஸ்வஸ்தி ஸ்ரீ. இதுவுமொரு பழங்கற்படி” என்று எழுதியிருப்பதுதான். இவ்வாறு பல சாசனங்கள் பாதுகாக்கப்பட்டதற்குப் பல சான்றுகளைக் கூறலாம். விரிவஞ்சிக் கூறாமல் விடுகிறோம்.

இக்காலத்தில் கோயில்களைப் புதுப்பிக்கிறவர் அவ்வாறு படி எடுத்துப் பாதுகாக்காமல் சாசனங்களை முழுவதும் அழித்துவிடு கிறார்கள். சாசன படிஎடுப்பாளர், பழம் பொருளாராய்ச்சி யாளர்கள் (எபிகிராபி, ஆர்க்கியாலாஜி இலாகா) கண்டுபிடித்துத் தமது அறிக்கை யில் கூறப்பட்ட சாசனங்களில் பல, இப்போது முழுவதும் அழிக்கப் பட்டுள்ளன. இதற்குக் காரணம், அவ்வறிக்கைகள் வெளிவந்த பிறகு, அச்சாசனம் உள்ள கோயிலைப் புதுப்பித்த "புண்ணியவான்கள்' சாசனங்களைப் படி எடுத்து அமைக்கவும் இல்லை; இருந்த சாசனங்களை அழியாமல் பாதுகாக்கவும் இல்லை. ஆகவே அச் சாசனங்கள் அழிந்துவிட்டன. அதனோடு சரித்திரச் செய்திகள் சிலவும் அழிந்துவிட்டன. இது நாட்டுக்குத் துரோகம் செய்தது ஆகாதா? நிற்க.

பழஞ்சிற்பங்களைப் போற்றுக

وو

கோயிலைப் புதுப்பிக்கிறவர்கள் கோயிலின் தூண், சுவர் முதலியவைகளில் இருந்த பழைய சிற்ப உருவங்களையும் அழித்து விடுகிறார்கள். பழைய சிற்ப வேலைக்கும் இக்காலத்துப் புதுப்பிக் கிறவர்களின் சிற்ப வேலைக்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு.