உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

33

நடராஜர் விக்கிரகம் எவ்வாறு ஐரோப்பா கண்டத்துக்குப் போய்விட்டது என்பதை ஒருவர் கூறினார். அக்கோயிலில் இருந்த பழைய நடராஜர் விக்கிரகத்தைத் தன் நாட்டுக்குக் கொண்டுபோக விரும்பிய ஒரு ஐரோப்பியர், அக்கோயில் அதிகாரிக்குக் கைக்கூலி கொடுத்துச் சரிப்படுத்திக்கொண்டாராம். பிறகு, சிற்பியிடம் (ஸ்தபதியிடம்) அதைப்போலவே ஒரு வெண்கல நடராசர் உருவம் செய்யச் சொல்லி, புதிய நடராசர் உருவத்தை அக்கோயிலில் வைத்துவிட்டுப் பழைய நடராசர் உருவத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டாராம்! பழைய நடராசருக்குப் பதிலாகப் புதிய நடராசர் வந்துவிட்டார். ஆனால் புதிய நடராசரை எடுத்துக் கொண்டு போகாமல் பழைய நடராசரை அந்த ஐரோப்பியர் ஏன் கொண்டு போனார்? அதில்தான் சூட்சுமம் இருக்கிறது. பழைய நடராசர் உருவத்தில் கலையழகு நிரம்பியிருந்தபடியினால் அதை எடுத்துக்கொண்டு போனார்! அன்பர்களே, நமது சிற்பக்கலைகள் எப்படியெல்லாம் கொள்ளை போயின, போகின்றன பாருங்கள்.

·

சிற்ப உருவங்கள் இன்னும் உள

மேல்நாட்டார் கள்ளத்தனமாகவும் நல்லத்தனமாகவும் கொண்டுபோன கலைச்செல்வங்கள் போகட்டும்; நமது நாட்டார், பழைய கோயில்களைப் புதுப்பித்தபோது அழிந்துபோன கலைச் செல்வங்கள் போகட்டும்; மண்ணிலும் குளங் குட்டைகளிலும் மறைந்து கிடக்கும் கலைச்செல்வங்கள் போகட்டும்; இவை யெல்லாம் போனாலுங்கூட, இன்னும் ஏராளமான கலைச் செல்வங்கள் நமது நாட்டில் இப்போதும் எஞ்சியுள்ளன. பல சிற்பக்கலைப் பொருள்கள், பற்பல கோயில்களில் கலைச்சிறப்பு உணராதவர்களால் புறக்கணிப்பட்டுக் கிடக்கின்றன. பல சிற்பக்கலைகள், இருட்டறைகளில் மறைந்து கிடக்கின்றன. இவைகளையேனும் போற்றிப் பாதுகாக்கவேண்டுவது நமது கடமையாகும்.

பல கற்சிற்பங்கள் வயல்களிலும் ஊர்ப்புறங்களிலும் நாதியற்றுக் கிடப்பதைப் பல இடங்களில் கண்டிருக்கிறேன். குளங்குட்டைகளின் ஓரத்தில் துணி தோய்க்கப் போட்டிருந்த சில கற்களைப் புரட்டிப் பார்த்தபோது அவற்றில் சிற்பங்கள் அமைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் எதைத் தெரிவிக்கின்றன? நமது நாட்டில், சிற்பக்கலையுணர்வும் அவற்றைக் கொண்டு சுவைக்கும்