உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

"நம்பிராட்டியார் ஒலோகமா தேவியார் பிரதிமம்” ஒன்றையும் செய்துவைத்ததாக அந்தச் சாசன எழுத்துக் கூறுகிறது. இதில் கூறப்பட்ட “பெரிய பெருமாள்” என்பது இராஜராஜ சோழனாவன். "நம்பிராட்டியார் ஒலோகமா தேவியார் என்பது இராஜராஜ சோழனுடைய அரசியின் பெயர்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் கோவில் மண்டபத்தில் கோயிலின் உள் வாயிலுக்குப் பக்கத்தில் கல்லால் செய்யப்பட்ட கரிகாற்சோழன் (இவன் சங்ககாலத்துக் கரிகாற்சோழன் அல்லன், பிற்காலத்தவன்) பிரதிமை உருவம் நின்ற கோலமாகக் காணப்படுகிறது. திருக்காளத்திக் கோயிலில், குலோத்துங்க சோழன் இளவரசனாக இருந்தபோது அவன் உருவமாக அமைக்கப்பட்ட பஞ்சலோகப் பிரதிமையுருவம் இருந்தது.

மதுரைக்கு அருகில் ஆனைமலையைச் சேர்ந்த நரசிங்க மங்கலத்தில், நரசிங்கப்பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் ‘லாடமுனி கோயில்' என்னும் குகைக் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் ண்ணாழிகையில் ஒரு பாண்டியனுடைய உருவமும் அவனுடைய இராணியின் உருவமும் அமைக்கப் பட்டிருக்கின்றன. இதை லாடமுனி கோயில் என்று தவறாக இக்காலத்தில் கூறுகிறார்கள். உண்மையில் இது பாண்டியன் உருவம் அமைக்கப்பட்ட கோயிலாகும்.

விசயநகரத்து அரசரான கிருஷ்ணதேவராயரின் உருவச்சிலை, இராணிகளோடு சிதம்பரம் கோவில்கோபுரத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கற்சிலையின் செப்பு உருவச்சிலை, திருப்பதிக் கோவிலில் இருக்கிறது.

தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களை அரசாண்ட நாயக்க மன்னர்களின் உருவச்சிலைகள் சில, அங்குள்ள கோயில் மண்டபங்களில் இருக்கின்றன.