உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

/ 83

கடவுளர்களின் உருவங்களைச் சிற்ப உருவங்களாக அமைத்தபோது, மனித உடலமைப்பு எவ்வளவு அழகாகவும் இயற்கையாகவும் அமையக்கூடுமோ அவ்வளவுக்கவ்வளவு அழகையும் இயற்கை வளர்ச்சியையும் பொருத்தி அத்தெய்வ உருவங்களை அமைத்தார்கள். அவர்கள் படைத்த ஜுயஸ், வீனஸ் முதலான கடவுள்களின் சிற்ப உருவங்களைப் பார்க்கும்போது, மானிட உடலமைப்பின் சீரிய வளர்ச்சிகள் அவைகளில் அமையப் பெற்றுப் பார்ப்பவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்து அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றன.

ஆனால், அச்சிற்பங்களைப் பார்க்கிறவர்களின் கருத்து, அவற்றின் உருவ அமைப்பின் அழகில்மட்டும் தங்கி நிற்கிறதே யல்லாமல், அதற்கப்பால் செல்லுவது இல்லை. அந்தச் சிற்பங்கள், மனித நிலைக்கு அப்பாற் பட்ட கடவுளின் உருவங்கள் என்னும் எண்ணத்தைத் தருவதில்லை.

ச்

ஆனால், நமது நாட்டுச் சிற்ப உருவங்களில் காணப்படுகிற தெய்வ உருவங்களோ அப்படிப்பட்டவையல்ல. நம்முடைய தெய்வச் சிற்ப உருவங்களில் கிரேக்க, ரோம நாட்டுச் சிற்ப உருவங்களைப்போல, மனித உடல் வளர்ச்சியோடு இயைந்த உடலமைப்பு இல்லாதது உண்மைதான். ஆனால், இந்தச் சிற்பங்களைப் பார்க்கிற போது நமது மனமும் உணர்ச்சியும் இந்தச் சிற்பங்களில்மட்டும் நின்றுவிடுவது இல்லை. இவ்வுருவங்கள் நம்முடைய மனத்தை அதற்கப்பால் எங்கேயோ அழைத்துச்சென்று, ஏதோ தெய்வீக உண்மையைக் காட்டுகின்றன. ஆகவே நமது நாட்டுத் தெய்வச் சிற்பங்கள், அயல்நாட்டுச் சிற்பங்களைப்போல வெறும் அழகான காட்சிப் பொருள்களாகமட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் ஈர்த்துச்சென்று கருத்துக்களை ஊட்டுகின்றன. எனவே, நம்முடைய தெய்வ உருவங்கள், உட்பொருளைச் சுட்டும் குறியீடுகளாகவும் உருவங்களுக்கு அப்பால் ஏதோ தத்துவத்தை உணர்த்துகிறவையாகவும் உள்ளன.

கோயில்களில் காணப்படுகிற தெய்வச் சிற்ப உருவங்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறினோம். சமண, பௌத்த சிற்பங்களைப் பற்றி இங்குக் கூறவில்லை.

சிற்பக்கலை உருவங்களை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, தெய்வத் திருவுருவங்கள், இயற்கை உருவங்கள்,