உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

235

மகேந்திரவர்மன் குகைக்கோயில் அமைப்புப்படி காணப் படுகிற இந்தக் குகைக்கோயில், மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்டு அவன் மகன் முதல் நரசிம்மவர்மன் காலத்தில் முடிவு பெற்றது என்று கருதவேண்டியிருக்கிறது. நரசிம்மவர்மன் கி. பி. 642- இல் சாளுக்கிய அரசனின் தலைநகரமான வாதாவியை (பாதாமியை) வென்றுகொண்டான். நரசிம்மவர்மன் சேனைத்தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சிறுத்தொண்ட நாயனார் என்னும் அடியார் என்று தெரிகிறது. இந்த வாதாவிப் போரில் சிறுத்தொண்டரும் சென்று போர்செய்தார் என்று பெரியபுராணத்தில் அறியக்கிடக்கிறது.

“ஈசனடி யார்க்கென்றும் இயல்பான பணிசெய்தே

ஆசில்புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்காகப் பூசல்முனைக் களிறுகைத்துப் போர்வென்று பொரும்அரசர் தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார். மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.

(பெரிய. சிறுத்தொண்டர், 5,6)

99

என்று கூறுகிறபடியினாலே, நரசிம்மவர்மன் வாதாவியை வென்ற போது அப் படையில் சிறுத்தொண்டரும் போர் புரிந்தார் என்று அறிந்து கொள்ளலாம்.

இந்தக் குகைச் சாசனத்திலே "வாதாவிகொண்ட நரசிம்மன்’ பெயர் எழுதப்பட்டிருப்பதனாலே, அவருடைய தந்தையான முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் இக்குகைக்கோயில் முற்றுப் பெறவில்லை என்பது தெரிகிறது. ஆனாலும், இக் குகைக்கோயில், மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பெற்ற படியினாலும், மகேந்திரவர்மன் காலத்து மரபுப்படி அமைந்திருப்பதனாலும் இப் பகுதியில் சேர்க்க வேண்டிய தாயிற்று.

கி. பி. 17 ஆம் நூற்றாண்டில் சதுரங்கப்பட்டினத்தில் இருந்து டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்கள்) சிலர் திருக்கழுக்குன்றத்தில் வந்து தங்கியிருந்தபோது, அவர்கள் தங்கள் பெயர்களை இக் குகையில் பல இடங்களிலும் செதுக்கிவைத்தார்கள். அப்பெயர்கள் இங்குப் பல டங்களில் காணப்படுகின்றன.