உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

விமானந்தான் இந்தப் பாறைக்கோயிலுக்கும் அமைந்திருக்கிறது. திரௌபதை இரதத்திற்கு மஞ்சம், கழுத்து, கூட கோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகள் இல்லை. இந்த இளங்கோயில், அவ்வுறுப்புகள் எல்லாம் அமையப்பெற்ற மூன்று நிலை (பூமி) யுள்ள இளங்கோயில்.

கருவறைக்கு மேலேயுள்ள மஞ்சம் (தோள்) என்னும் உறுப்பில் கூடுகள் அமைந்துள்ளன. மஞ்சத்தின் மேலே கூடகோஷ்ட பஞ்சரங் களும் மூலைகளில் கர்ணகூடுகளும் பல்லவர் காலத்து அமைப்புப் படி செம்மையாக அமைக்கப் பட்டுள்ளன. இதற்குமேலே சற்று உள்ளடங்கி இரண்டாவது நிலை நிலை பூமி) கூடகோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகளுடன் அமைக்கப்பட்டு அதற்குமேலே, சற்று உள்ளடங்கி மூன்றாவது நிலை (பூமி) மேற்படி உறுப்புகளோடு அமைந்திருக்கிறது. இதற்கு மேல் இளங்கோயில் விமானம் நான்கு பட்டையாக அமைந்து இனிது விளங்குகிறது. இந்த விமானத்தின் மேலே இருக்கவேண்டிய கலசம் காணப்படவில்லை.

“பிடாரி இரதங்கள்”

வலயங்குட்டை இரதத்திற்கு வடக்கே சிறிது தூரத்தில் வேறு இரண்டு பாறைக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றிற்கும் பிடாரி இரதங்கள் என்று பெயர் கூறப்படுகிறது. மகாபலிபுரத்தின் கிராம தேவதையாகிய பிடாரியின் கோயில் அருகில் இருப்பதனாலே, பிடாரி இரதங்கள் என்று பெயர் கூறப்படுகிறது.'

10

இவ்விரண்டு பாறைக் கோயில்களில் வடக்கு நோக்கிய பாறைக்கோயில், வலயங்குட்டைப் பாறைக்கோயிலைப் போலவே மூன்று நிலையுள்ள இளங்கோயில் ஆகும். இக்கோயிலும் அடிப் பக்கமும் கருவறையும் அமைக்கப்படாமல், மேல் பகுதிகள் மட்டும் செம்மையாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், மூன்றுநிலை (பூமி)களும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்து, கூடகோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகள் அமையப்பெற்று, உச்சியில் நான்கு பட்டையான இளங்கோயில் விமானத்தைக் கொண்டிருக்கிறது. வலயங்குட்டைக் கோயிலும், பிடாரி கோயிலும் மூன்று நிலையுள்ள இளங்கோயில்களே. என்றாலும் கழுத்து முதலிய உறுப்புகளில் இவற்றிற்குச் சிறு வேறுபாடுகள் உண்டு.