உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

273

அமைப்பைப் போன்றே அமைக்கப்பட்டிருப்பதை இப்போதும் காணலாம்.

இக்கட்டிடங்கள், பௌத்த விகாரையின் அமைப்பைப்போன்று, “சாலாகார” விமான முள்ளனவாக இருக்கின்றன. இந்த அமைப்பு பௌத்தச் சார்பானது. ஏறக்குறைய இதே அமைப்பைக் கொண்டதுதான் மாமல்லரத்தில் (மகாபுலிபுரத்தில்) உள்ள “பீமரதம்” என்னும் சாலாகார விமானக் கட்டிடம். “பீமரதம்” பௌத்தச் சார்பான கட்டிடம் என்பதை எல்லோரும் அறிவர்.

சிதம்பரக்கோயில் பௌத்தச் சார்புடையது என்பதை, முதலாம் வரகுண பாண்டியன் காலத்தவரான (மூன்றாம் நந்திவர்மன் காலத்தவரான) மாணிக்கவாசகர், வரலாற்றினாலும் குறிப்பாக அறியலாம். மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து வென்றார் என்றும், தோல்வியுற்ற பௌத்த பிக்குகள் சிதம்பரத்தைவிட்டு இலங்கைக்குப் போய்விட்டார்கள் என்றும் இவர் வரலாறு கூறுகிறது. இவ்வரலாற்றிலிருந்து, சிதம்பரத்தில் அக்காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதும், அவர்களின் விகாரைகளும் அங்கு இருந்தன என்பதும் தெரிகின்றன. ஆகவே, பௌத்தருடைய கட்டிடக்கலை அமைப்பு இக்கோயிலிலும் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.

சிதம்பரத்திலே அக்காலத்தில் பௌத்தர்களோடு ஜைனர்களும் இருந்தார்கள். இப்போதும் சிதம்பரத்தில் ஒரு ஜைனத்தெரு இருப்பதே இதற்குச் சான்றாகும். ஆனால், சிதம்பரத்தில் அக்காலத்தில் ஜைனர்களைவிட பௌத்தர்களே அதிகமாக ஆதிக்கம் பெற்றிருந்தார்கள் என்பது மாணிக்கவாசகர் வரலாற்றிலிருந்து விளங்குகிறது.

காட்டுப்பள்ளி

நந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட புதிய கோயில் களைப் பார்ப்போம். செங்கற்பட்டு மாவட்டத்தில் பொன்னேரி தாலுகாவில் காட்டுப்பள்ளி என்னும் ஊரில் கட்டப்பட்டது இந்தச் சிவன் கோயில். இக்கோயில், “புழற்கோட்டத்து நாயறு நாட்டுத் திருக்காட்டுப்பள்ளி.” என்று சாசனத்தில் கூறப்படுகிறது. இக்கோயிலைக் கட்டியவன் யஜ்ஞபட்டன் என்றும், இக் கோயிலுக்கு நிலபுலங்களை நந்திவர்மன் தானம் செய்தான் என்றும் வேலூர்ப் பாளைய செப்பேட்டுச் சாசனங் கூறுகிறது. இக் கோயில் இப்போது, இடிந்து பழுதடைந்து கிடக்கிறது.