உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கோயில்களின் மேற்புறங்கள் (விமானங்கள்) பாறையில் அமைக்கப் படாமல் வெறும் பாறையாகவே விடப்பட்டிருக்கிறபடியால், மேற்புற அமைப்பைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

பௌத்தக் காலத்தில் செங்கற்களினால் கட்டப்பட்ட யானைக் கோயில்கள். ஏறக்குறைய எல்லாம் அழிந்துவிட்டன. ஏனென்றால் செங்கற்கட்டடங்கள் நெடுங்காலம் நிற்பது இல்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில். சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில், சம்பாபதி என்னும் பௌத்தத் தெய்வத்துக்குக் குச்சரக்குடிகை (குஞ்சரக்குடிகை) என்னும் கோயில் அமைந்திருந்தது என்றும், அது யானைக்கோயில் உருவமாக அமைந்திருந்ததென்று அதன் பெயரிலிருந்து (குச்சரக் குடிகை குஞ்சரக்குடிகை - யானைக்கோயில்) தெரிகிறது என்றும் ச்செய்தி மணிமேகலை காவியத்திலிருந்து அறியப்படுகிறது என்றும் கூறினோம். அந்தக் கோயில் இப்போது மறைந்து போயிற்று. தமிழ் நாட்டிலிருந்த பௌத்தக் காலத்து யானைக்கோயில்கள் எல்லாம் அவை செங்கல்களால் கட்டப்பட்டபடியால் ஒன்றைத் தவிர மற்றவை அடியோடு அழிந்துபோயின. ஆனால், ஆந்திர தேசத்தில் கட்டப்பட்ட பௌத்தக் காலத்து யானைக்கோயில்களின் முழுகட்டடங்கள் அழிந்துபோனபோதிலும் அவற்றின் அடிப்பகுதிகளாவது இப்போதும் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பௌத்தக் காலத்து யானைக்கோயில் கட்டடங்கள் முழுவதும் அழிந்துபோக, ஆந்திர நாட்டுப் பௌத்தக்கால யானைக் கோயில்களின் அடிப்பகுதிகளாவது அழியாமல் நிலைபெற்றி ருப்பதற்குக் காரணம் என்ன? தமிழ் நாட்டிலே பத்தி இயக்கம் தோன்றிச் சைவநாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் வெளிப் பட்டுப் பௌத்த ஜைன மதங்களுடன் சமயப்போர் செய்தார்கள். தமிழ் நாட்டில் சமயப்போர் தொடங்கிய சில நூற்றாண்டுக்குப் பிறகு ஆந்திர நாட்டில் சமயப் போர் ஆரம்பித்தது. ஆகவே, தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர் காலத்து யானைக்கோயில் கட்டடங்கள் போற்றுவார் இல்லாமல் விரைவாக அழிந்துப்பட்டன. ஆந்திர நாட்டில் பௌத்த மதம் சில நூற்றாண்டுக்குப் பிறகும் நிலைபெற்றிருந்து பிறகு அழிக்கப் பட்டது. ஆகையினால்தான் ஆந்திர நாட்டில் பௌத்தக்கால யானைக்கோயில்களில் சிதைவுகள் இப்போதும் காணப்படுகின்றன.