உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் - - 103

இனி, கொல்லி மலைமேல் இருந்த கொல்லிப்பாவையைப் பற்றி ஆராய்வோம். கொல்லிப் பாவை என்பது கொல்லிப் மலைமேல் அழகு வாய்ந்த பெண் உருவம். இந்த மலைமேல் சென்று பார்த்தால், ஓர் அழகிய மங்கையின் உருவம், காண்பவர் மயங்கத்தக்க காட்சி யுடையதாய்த் தோன்றுமாம். அருகில் சென்று பார்த்தால், இது காட்சிக்கு மறைந்துவிடுமாம்.

கொல்லிமலை எங்கிருந்தது என்பதைப் பார்ப்போம். கொங்கு நாட்டைச் சேர்ந்த சேலம் மாவட்டத்தில் கொல்லி மலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாமக்கல் தாலுகாவிலும், இராசிபுரம் தாலுகாவிலும் கொல்லிமலை பரவியிருக்கிறது. இந்த மாலை வடக்கு தெற்காகப் பதினெட்டு மைல் வரையிலும் பரவியிருக்கிறது. கிழக்கு தெற்கு மேற்குப் பக்கங்களில் இந்த மலை செங்குத்தாகக் உயர்ந்து கடல் மட்டத்துக்கு மேல் 4000 அடி உயரமாக இருக்கிறது. வடக்குப் பக்கத்தில் சரிவாகத் தாழ்ந்து இருக்கிறது. இந்தப் பகுதியில் வரகூர், கோம்பை, மூலைக்குறிச்சி, பெரிய கோம்பை, வால கோம்பை என்று இம்மலை பெயர் பெற்றுள்ளது.

நாமக்கல் பக்கத்திலிருந்து பார்த்தால், இந்தக் கொல்லி மலையின் உச்சி சமதரை போல ஒரே மட்டமாகக் காணப்படு கிறபடியால், இதற்கு அங்குள்ளவர் சதுரகிரி என்று பெயர் கூறுவர்.

இம்மலைமேல் அறப்பளீசுவரர் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலுக்கு இரண்டு மைல் தூரத்திலே ஆகாசகங்கை என்னும் அருவி (நீர்வீழ்ச்சி) உண்டு.

இராசிபுரம் தாலுகாவின் பக்கமாக இந்த மலையின் உச்சி மிக உயர்ந்து கடல் மட்டத்துக்குமேல் 4668 அடி உயரம் இருக்கிறது. இப்பகுதிக்கு 'வேட்டைக்காரன் மலை' என்று பெயர். இப்பகுதியில் தான் சங்க நூல்களில் கூறப்படுகிற ஓரி என்னும் வள்ளலாகிய சிற்றரசன் வாழ்ந்து வந்தான்.

கொல்லி மலைகளின்மேலே உள்ள சில கிராமங்களில் மலைவாசிகள் வாழ்கிறார்கள். கொல்லி மலைகளில் மேற்குப் புறமாக ஓர் இடத்திலே, ஒரு மலைப்பாறையிலே, சங்கப் புலவர் வியந்து கூறிய கொல்லிப் பாவை இருந்தது.