உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கிடந்த அந்த நகரத்தை அண்மைக் காலத்தில் பழம்பொருள் ஆய்வாளர் அகழ்ந்து பார்த்தார்கள். இடிந்து சிதைந்து போன மாளிகைகளும் வீடுகளும் தெருக்களும் ஏனைய பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. அங்குக் காணப் பட்ட பொருள்களில், சில மாளிகைச்சுவர்களில் எழுதப்பட்ட சுவர் ஓவியங்களும் இருந்தன. ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தச் சுவர் ஓவியங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் காட்சியளிக்கின்றன!

திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் இருந்த பல்லவ அரசன் மகேந்திரவர்மன் (கி.பி. 600-630) சில குகைக் கோயில்களை அமைத்தான் என்று கூறினோம். அவன் அமைத்த குகைக்கோயில் களின் சுவர்களில் ஓவியங்களையும் எழுதுவித்தான். அவனே ஓவியக் கலையைப் பயின்றவன் என்பதை அவன் கொண்டிருந்த ‘சித்திரகார புலி' என்னும் பெயரிலிருந்து அறிகிறோம். அவன் காலத்தில் எழுதப்பட்ட சுவர் ஓவியங்கள் மறைந்து விட்டன.

காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோவில் சுவர்களிலும் விழுப்புரத்துக்கடுத்த பனமலைக் கோயில் சுவர்களிலும் பல்லவ அரசர் காலத்து ஓவியங்கள் எழுதப்பட்டிருந்த அடையாளங்கள் காணப்படு கின்றன. அவற்றில் ஒன்றேனும் முழு ஓவியங்களாகக் கிடைக்க வில்லை. தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோவில் சுவர்களில் சோழர் காலத்துச் சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. புதுக் கோட்டைச் சித்தன்னவாசல் குகைக் கோவிலிலும் திருநெல்வேலித் திருமலை புரத்துக் குகைக்கோவிலிலும் பாண்டியர் காலத்து ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஓவியங்கள் காலப்பழமையி னாலும் பாதுகாப்பு இல்லாத படியாலும் சிதைந்து மங்கிப்போய் மறைந்து கொண்டிருக்கின்றன.

காஞ்சிபுரத்து ஏகாம்பரேசுவரர் கோவிலில் பௌர்ணமி மண்டபம் என்னும் மண்டபத்தில் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த ஓவியங்கள் காலப்பழமையினால் சிதைந்துபோய் அங்கும் இங்குமாகப் பூக்கொடிகளும் அன்னப் பறவைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மண்டபத்தையே அடியோடு தகர்த்துவிட்டார்கள். அந்த மண்டபத்துத் தூண்களில் முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன.