உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இவற்றைக் கண்டுபிடித்தவரும் ழூவோ தூப்ராய் அவர்களே. இங்குள்ள ஓவியங்கள் காலப் பழைமையால் பெரிதும் ஒளி மழுங்கி யிருப்பதோடு அழிந்தும் சிதைந்தும் உள்ளன. மத்தளம் வாசிப்பவள் உருவம், ஆண்பெண் உருவங்கள், இலைக்கொடி, பூக்கொடி, வாத்து இவைகளின் ஓவியங்கள் சிதைந்தும் அழிந்தும் காணப்படுகின்றன, மலையடிப்பட்டி குகைக் கோயிலிலும், பழைய காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. இவையும் காலப் பழைமையால் மழுங்கி மறைந்துவிட்டன.

தஞ்சைக் கோயில் ஓவியம்

கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இராஜராஜ சோழ னால் அமைக்கப்பட்டது தஞ்சாவூர் பெரிய கோயில் என வழங்குகிற இராஜராஜேச்சுரம். இக்கோயிலில் இராஜராஜன் காலத்திலேயே எழுதப்பட்ட சோழர் காலத்து ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங் களும் நெடுங்காலமாக மறைந்திருந்தன: இல்லை, மறைக்கப் பட்டிருந்தன.

சோழர் காலத்தில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தச் சித்திரத்தின் மேலே, கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலே தஞ்சையை அரசாண்ட நாயக்க மன்னர்கள் (இவர்கள், விஜயநகர அரசருக்குக் கீழடங்கி அரசாண்ட தெலுங்கர்கள்), வேறு புதிய ஓவியத்தை எழுதி மறைத்து விட்டார்கள். புதிய ஓவியத்தின் கீழே இருந்த சோழர் காலத்துச் சித்திரம் நெடுங்காலம் மறைக்கப் பட்டிருந்தது. மறைக்கப் பட்டிருந்த சோழர் காலத்துச் சித்திரங்களைக் கண்டு பிடித்தவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து காலஞ்சென்ற திரு. எஸ். கே. கோவிந்த சாமி அவர்கள்.

இந்தப் பழைய சித்திரம் அவ்வளவாகச் சிதைந்து அழிந்துவிட வில்லை. வர்ணம் மட்டும் சிறிது மங்கிவிட்டது. இந்த ஓவியம் சுந்தரமூர்த்தி நாயனாருடைய வரலாற்றை விளக்குகிறதாக உள்ளது. சுந்தரமூர்த்திகளை, இறைவன் வயோதிகப் பிராமணன் வேடத்துடன் வந்து அடிமை முறியோலையைக் காட்டி ஆட் கொண்டதும், சுந்தரமூர்த்திகள் சேரமான்பெருமாள் நாயனாருடன் கயிலையங் கிரிக்குச் செல்வதும், கயிலையங்கிரியில் பரமசிவன் பார்வதியுடன் வீற்றிருக்கும் காட்சியும், இசைப் பாடல்களுடனும் இசைக்கருவி களுடனும் சிலர் நடனம் ஆடும் காட்சியும் இந்த ஓவியத்திலே இடம் பெற்றிருக்கின்றன.